Published : 03 Nov 2014 11:30 AM
Last Updated : 03 Nov 2014 11:30 AM

கருப்பு பண மீட்பு வழக்கை விரைவுபடுத்த இந்திய தூதரகங்களில் சிபிஐ அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: சிபிஐ

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, இந்திய தூதரகங்கள் சிலவற்றில் சிபிஐ அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறியதாவது:

கருப்பு பண மீட்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கேட்டுக்கொண்டபடி, எங்கள் தரப்பு கருத்துகளைச் சமர்ப்பித்துள்ளோம். அதில் விசாரணையை விரைவுபடுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை விரிவாக குறிப்பிட்டுள்ளோம்.

குறிப்பாக, கருப்பு பண பதுக்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவி கேட்டு வெளிநாட்டு அரசுகளுக்குக் கடிதம் எழுதும் (லெட்டர்ஸ் ரொகேட்டரி) முறையை (ரெட் டேப்) முதலில் குறைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். ஏனெனில், இத்தகைய கடிதங்கள் சென்று சேர்வதற்கே பல வாரங்கள் ஆகின்றன. மேலும் இந்த நடைமுறையால் விசாரணை காலதாமதமாகும்.

எனவே, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, யுஏஇ உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள தூதரகங்களில் சிபிஐ அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இந்திய அரசு சார்பில் சம்பந்தப்பட்ட அரசுகளிடமிருந்து தேவையான தகவல்களைத் திரட்ட இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தூதரகங்கள் இந்த விஷயத் தில் உதவி செய்து வந்தாலும், விசாரணையை விரைவுபடுத்து வதற்காக தனியாக அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நேரம் விரயமாகும். எனவே இந்தக் கருத்துகளை எஸ்ஐடி கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என சின்ஹா தெரிவித்தார்.

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புலனாய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருப்பு பணம் பற்றி தகவல் தரலாம்

எஸ்ஐடி துணைத் தலைவர் நீதிபதி அரிஜித் பசாயத் கூறும்போது, “கருப்பு பணம் பதுக்கல் தொடர்பாக குறிப்பிடத்தக்க, உறுதியான, தகவல் ஏதேனும் தெரிந்தால் பொது மக்கள் அதுகுறித்து இன்டர்நெட், இ-மெயில், அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கலாம். இதற்காக எஸ்ஐடி சார்பில் பிரத்தியேகமான தகவல் தொடர்பு கட்டமைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும். இதுகுறித்து விரைவில் விளம்பரம் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x