Published : 25 Mar 2014 09:15 AM
Last Updated : 25 Mar 2014 09:15 AM
அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் என்று பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகளை உடனடியாக வாபஸ் பெறுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஜெ.செல்லமேஸ்வரர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம். ஆனால் அதன்பின்னும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
ஆதார் அட்டை இல்லாததால் திருமணத்தை பதிவு மறுப்பதாக ஒரு புகார் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வேறு சில கடிதங்களில், ஆதார் அட்டை இல்லாததால் சொத்துப் பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்துக்காக யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம். அப்படி இருந்தும் ஆதார் அட்டை கட்டாயம் என்று வலியுறுத்துவது ஏன்?
ஆதார் அட்டை கட்டாயம் என்று ஏதாவது அறிவிக்கைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால் அந்த அறிவிக்கைகள் அனைத்தும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், ஆதார் அட்டை தொடர்பான அறிவிக்கைகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
விவரங்களை வெளியிடக்கூடாது
இந்த வழக்கில் நீதிபதிகள் மேலும் கூறியதாவது:
ஆதார் அட்டைதாரர்களின் தகவல்களை போலீஸ் துறை உள்பட வேறு எந்தத் துறைக்கும் அளிக்கக் கூடாது. சுமார் 60 கோடி மக்கள் தங்களது பயோமெட்ரிக் தகவல்களை ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ளனர்.
அட்டைதாரரின் விருப்பம் இன்றி வேறு யாருக்கும் அந்தத் தகவல், விவரங்களை அளிக்கக்கூடாது. தனிமனிதரின் அந்தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டும். அதைக் காப்பாற்ற ஆதார் அட்டை ஆணையமும் உறுதியளித்துள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT