Published : 28 Feb 2014 09:30 AM
Last Updated : 28 Feb 2014 09:30 AM
சத்தீஸ்கரில் நக்சலைட்கள் வெள்ளிகிழமை நடத்திய தாக்குதலில் 7 போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
போலீஸார் வைத்திருந்த ஆயுதங்களை கொள்ளையடித்துவிட்டு, அவர்களது வாகனங்களுக்கு நக்சல்கள் தீவைத்து விட்டுச் சென்றுள்ளனர். சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமுள்ள தன்டேவாடா மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நக்சல் ஒழிப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஆர்.கே.விஜி கூறியது:
ஷியாம்கிரி மலைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் சுக்லா தலைமையிலான 12 பேர் அடங்கிய குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுமார் 100 நக்சலைட்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சுக்லா உள்பட 5 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 4 பேரில் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 காவலர்கள் காயமின்றி தப்பினர்.
போலீஸார் வைத்திருந்த ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்பட 4 துப்பாக்கிகளை நக்சல்கள் திருடிச் சென்றுவிட்டனர். போலீஸார் சென்ற மோட்டார் சைக்கிள்களையும் அவர்கள் தீவைத்து எரித்துவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸ் படை அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இவ்வாறு விஜி கூறினார்.
போலீஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மலை கிராமத்துக்கு அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகள் நடைபெறக் கூடாது என்ற நோக்கில் இந்த கோழைத்தனமான தாக்குதலை நக்சல்கள் நடத்தியுள்ளனர். இதன் மூலம் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை அவர்கள் நிரூபித்துள்ளனர் என்று ரமண் சிங் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT