Published : 25 Jan 2017 03:54 PM
Last Updated : 25 Jan 2017 03:54 PM

அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளில் 69% நிதி அனாமதேய ஆதாரங்களிலிருந்து வருகிறது: ஏடிஆர் ஆய்வில் தகவல்

அரசியல் கட்சிகளால் பெறப்படும் நன்கொடையில் 69% நிதி அறியப்பட முடியாத ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டவையாகும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தன் ஆய்வில் தெரிவித்துள்ளது.

அத்தோடு, அனாமதேய நிதி ஆதாரங்களில் இருந்து தேசிய கட்சிகள் பெறும் நன்கொடை 313 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், மாநிலக் கட்சிகளின் நன்கொடை அளவு 652% அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வொன்றை மேற்கொண்டது. அதில் 2004-ம் ஆண்டு முதல் 2015 வரை அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை அறிக்கையாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன் விவரங்கள்:

* 2004-05 முதல் 2014-15 வரை தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.11,367 கோடி.

* இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த நன்கொடை ரூ.3,982 கோடி. குறிப்பாக அனாமதேய ஆதாரங்கள் மூலம் கிடைத்த பணம் ரூ.3,323 கோடி.

* அதற்கு அடுத்த இடத்தில் உள்ள பாஜகவுக்குக் கிடைத்துள்ள நன்கொடை ரூ.3,272 கோடி. அதில் அனாமதேய ஆதாரங்கள் மூலம் ரூ.2,125 கோடி பெறப்பட்டுள்ளது.

* பெயர் வெளியிட விரும்பாத நபர்களிடம் இருந்து தேசிய கட்சிகள் பெறும் நன்கொடை 313 சதவீதம் அதிகரித்துள்ளது.

* மாநிலக் கட்சிகள் பெறும் நன்கொடையின் அளவு 652% அதிகரித்துள்ளது.

* பகுஜன் சமாஜ்வாடி கட்சிதான் 100% பெயர் குறிப்பிட விரும்பாத நபர்களால் நன்கொடை பெற்ற ஒரே கட்சி. இதன் வருமானம் 11 ஆண்டுகளில் 2,057% அதிகரித்துள்ளது.

* அதாவது 2004-ல் அக்கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடை ரூ.5.16 கோடியாக இருந்தது. அதே நேரம் 2014-15ல் ரூ.111.96 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது

* மாநில அளவில் அதிக நன்கொடை பெற்ற கட்சிகளில் திமுக முதல் இடத்தில் உள்ளது. திமுக மொத்தம் ரூ.203 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

* இரண்டாவது இடத்தில் அதிமுக உள்ளது. அக்கட்சிக்கு ரூ.165 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, ரூ.1,835.63 கோடிக்கு மட்டுமே நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் கிடைத்துள்ளன. சொத்து விற்பனை, உறுப்பினர்கள் சந்தா, வங்கி வட்டி, கட்சி வெளியீடுகளின் விற்பனை உள்ளிட்ட அறிந்த வருவாய் இதில் ரூ.1,698.73 கோடி. அதாவது மொத்த வருவாயில் 15% மட்டுமே.

ஆறு தேசியக்கட்சிகளின் மொத்த வருவாயில் 43% காங்கிரஸுடையது. பாஜக ரூ.3272 கோடி வருவாயுடன் 35% என்று 2-ம் இடத்தில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் ரூ.893 கோடி. காங்கிரஸுக்குக் கிடைத்த நன்கொடைகளில் 83% தொகை அதாவது ரூ.3,323.39 கோடி அனாமதேய ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. பாஜக-வின் 65% நன்கொடை நிதி, அதாவது ரூ.2,125 கோடி அனாமதேய ஆதாரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.

ஒரே தடவையாக ரூ.20,000த்திற்கும் அதிகமாக நன்கொடை பெற்றால் அதன் ஆதாரங்களை அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தியாக வேண்டும், இந்த வகையில் விவரங்கள் வெளியான நன்கொடை தொகை ரூ.1405.19 கோடி, இதில் பாஜக ரூ.918 கோடி நிதிக்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி கடந்த 11 ஆண்டுகளாக ரூ.20,000த்துக்கும் அதிகமான நன்கொடைத் தொகை பற்றிய விவரங்களை அளிக்கவில்லை. காங்கிரஸ் ரூ.400.32 கோடி நன்கொடைத் தொகைக்கு மட்டுமே விவரங்களை அளித்துள்ளது.

வருமான வரி:

ஜனநாயக சீர்த்திருத்த சங்க அறிக்கையின் படி, 51 பிராந்திய கட்சிகளில் 42 கட்சிகளின் வருவான வரி விவரங்கள் குறைந்தது ஒரு ஆண்டுக்கு கிடைக்கவில்லை. பிராந்தியக் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.2089 கோடி இதில் சமாஜ்வாதிக் கட்சியின் வருவாய் அதிகபட்சமாக ரூ.819 கோடியாகும். அடுத்த இடத்தில் திமுக ரூ.203 கோடியுடனும், அதிமுக ரூ.165 கோடியுடனும் உள்ளன.

இந்த ஆய்வின் அடிப்படையில் அனைத்து கட்சிகளின் நன்கொடையாளர்கள் முழு விவரங்களை வெளியிட தகவலுரிமை சட்டத்தைக் கோரியுள்ளது ஜனநாயக சீர்த்திருத்த சங்கம்.

“பூட்டான், நேபாள், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கட்சிகளின் வருவாயில் 75% வருவாயின் ஆதாரங்கள் தெரியாமல் இருந்ததில்லை. ஆனால் இந்தியாவில் 75% வருவாய் குறித்த விவரங்கள் இல்லை என்ற நிலைமைதான் இருந்து வருகிறது. அயல்நாட்டிலிருந்து நிதி பெறும் எந்த ஒரு அமைப்பும் எந்த ஒரு வேட்பாளருக்கோ, எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்கிறது இந்த அறிக்கை.

எனவே வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்கள், நிதி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற தனித்த அமைப்பு மத்திய தலைமை தணிக்கை குழு ஆய்வு செய்வது அவசியமாகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x