Published : 27 Nov 2014 10:01 AM
Last Updated : 27 Nov 2014 10:01 AM

சங்கிலியால் கட்டும்போது கீழே தவறி விழுந்தார்: யானை மிதித்து பாகன் பலி

சேலையூர் அகோபில மடத்தில் யானை மிதித்ததில் பாகன் பரிதாபமாக இறந்தார்.

சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் காவல் நிலையம் பின்புறம், அகோபில மடம் உள்ளது. சுமார் 50 ஊழியர்கள் மடத்திற்குள் தங்கியுள்ளனர். மடத்தில் யானை ஒன்றும் உள்ளது. பாகன் விஜயன் (35) மற்றும் உதவி பாகன் கணேஷ் (21) ஆகியோர் யானையை பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் மடத்தில் சிறப்பு பூஜை முடிந்த பிறகு, மடத்தின் பின்புறத்தில் யானையை கட்டுவதற்காக உதவி பாகன் கணேஷ் அழைத்துச் சென்றார். அங்கு யானையின் பின்காலில் சங்கிலியால் கட்டும்போது, கால் இடறி பாகன் கணேஷ் கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக யானை தனது பின்னங்காலை கணேஷின் வயிற்றில் வைத்துவிட்டது.

வலி தாங்காமல் கணேஷ் அலறித் துடித்தார். இவரது சத்தம் கேட்டு, மடத்தின் ஊழியர்கள் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்த கணேஷை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீஸார் பாகன் கணேஷின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக் காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிழக்கு தாம்பரம் சேலையூர் அகோபில மடத்தில் பாகனை மிதித்து கொன்ற யானை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x