Published : 25 Feb 2015 11:48 AM
Last Updated : 25 Feb 2015 11:48 AM
அன்னை தெரஸா மதப்பிரச்சாரகர் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்து கசப்பான உண்மை என்று சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்னா தலையங்கத்தின் விவரம்:
"கிறிஸ்தவ மிஷெனரிகள் இந்தியாவுக்கு வந்ததற்குக் காரணம் மதமாற்றமே. முஸ்லிம்கள் மதமாற்றத்தை கத்தி முனையில் மேற்கொண்டனர், கிறிஸ்தவர்கள் அதை பண பலத்தாலும், சேவை என்ற போர்வையிலும் மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் உண்மையைப் பேசியதன் மூலம் மோகன் பாகவத் தேசத்துக்கு நன்மை செய்திருக்கிறார். அன்னை தெரஸாவின் சேவைகளை நாங்கள் மதிக்கிறோம்.
அன்னை தெரஸாவைப் போல், இந்து மதத்தைச் சேர்ந்த நிறைய சமூக ஆர்வலர்களும் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்திருக்கின்றனர். ஆனால், அவர்களெல்லாம் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை.
அன்னை தெரஸாவோ சேவை என்ற போர்வையில் மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்பது கசப்பான உண்மை. இந்த உண்மையையே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் எடுத்துக் கூறியுள்ளார்.
அவரது கருத்தால் மதம் மாறியவர்களை தாய் மதத்துக்கு திரும்பச் செய்யும் 'கர் வாப்ஸி' பிரச்சாரம் வலுப்பெறும். இதற்காக, மோகன் பாகவத்தை, சிவசேனா வெகுவாக பாராட்டுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோகன் பாகவத் பேசியது:
"அன்னை தெரஸாவின் சேவைகள் எல்லாம் மிகவும் நல்லதாகவே கருதப்பட்டிருக்கும், அவரது சேவைக்குப் பின்னணி குறிக்கோள் மட்டும் மதமாற்றமாக இல்லாமல் இருந்திருந்தால்.
மதமாற்றத்தைப் பற்றி நான் விமர்சிக்கவில்லை. ஆனால், சேவையின் பெயரில் மதமாற்றத்தை மேற்கொள்ளும்போது, அந்த சேவைக்கான அடிப்படை ஆதாரமே மதிப்பற்றதாகிவிடுகிறது.
அன்னை தெரஸாவின் குறிக்கோள் மதமாற்றமே, ஆனால், இங்கு தனது சேவையைத் தொடங்கியுள்ள அப்னா கர் அமைப்பின் கொள்கை ஏழைகளுக்கு சேவை செய்வது மட்டுமே" என்று மோகன் பாகவத் பேசியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT