Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM
கர்நாடகத்தில் 20 பெண்களை பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொன்ற ஆசிரியர் மோகன்குமாரை குற்றவாளி என மங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அவருக்கான தண்டனையை வியாழக்கிழமை அறிவிப்பதாக நீதிபதி பி.கே.நாயக் அறிவித்தார்.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் குமார் (50). அங்குள்ள தனியார்ப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் 2009-ம் ஆண்டு பண்டுவலாப் பகுதியை சேர்ந்த அனிதா (22) என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கர்ப்பத்தை கலைப்பதற்காக அனிதாவை 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி ஹாசனுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள விடுதியில் அனிதாவை தங்க வைத்து, கருக்கலைப்பு மாத்திரை எனக் கூறி, சயனைடு கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார்.
அனிதாவைத் தொடர்ந்து..
ஹாசன் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் பிணமாகக் கிடந்த அனிதாவின் உடலை போலீஸார் கைப்பற்றி, வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர். அப்போது 6 மாதங்களுக்கு முன்பு மங்களூரில் ஒரு பெண் இதே போல கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. எனவே கர்நாடகத்தில் பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொலைச் செய்யப்பட்ட பெண்களின் வழக்குகளை போலீஸார் தூசி தட்டினர். 2005-ஆம் ஆண்டிலிருந்து 2009-ஆண்டு ஜூன் மாதம் வரை தக்ஷின கன்னட மாவட்டத்தில் மட்டும், 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சயனைடு மூலம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அனிதா உள்ளிட்ட கொலைகளை தொடர்ச்சியாக செய்த சயனைடு கொலைகாரனை போலீஸார் தீவிரமாக தேடினர்.அப்போது மங்களூர் பேருந்து நிலையம் அருகே இன்னொரு பெண்ணை சயனைடு கொடுத்து கொல்ல முயன்ற மோகன் குமாரை 2009 அக்டோபரில் கைது செய்தனர்.
அவரை விசாரித்தபோது 2005-ஆம் ஆண்டிலிருந்து 2009-ஆம் ஆண்டு வரை 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொன்றது தெரிய வந்தது. இதில்14 பெண்கள் தக்ஷின கன்னட மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மீதமுள்ள 6 பெண்கள் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர்கள்.
ஒப்புதல் வாக்குமூலம்
அவர்கள் அனைவரையும் திருமணம் செய்வதாக ஆசைக் காட்டி பலாத்காரம் செய்ததாகவும், கருக்கலைப்பு மாத்திரை எனக்கூறி சயனைடு கொடுத்து கொன்று விட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ‘சயனைடு கில்லர்’ என வழக்கைப் பதிவு செய்த போலீஸார் கடந்த 4 ஆண்டுகளாக மங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தனர்.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நீதிபதி பி.கே.நாயக் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது பண்டுவலாப் பகுதியை சேர்ந்த அனிதாவை கொலை செய்த வழக்கில் ஆசிரியர் மோகன்குமாரை குற்றவாளி என நீதிபதி உறுதி செய்தார்.மேலும் ‘பலாத்காரம் செய்தல், ஏமாற்றுதல், தடயங்களை அழித்தல், துன்புறுத்தல், கொலை செய்தல்’ உள்ளிட்ட பிரிவுகளில் மோகன்குமாருக்கு தண்டனை உறுதி செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தண்டனை விவரங்களை வருகிற 19-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.
நாளை வெளியாகும் தண்டனை என்பது 'சையனைடு கில்லர்' மோகன் குமார், கடைசியாக கொன்ற அனிதா தொடர்பான வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு மட்டுமே. மீதம் இருக்கும் 19 பெண்களை கொலை செய்த வழக்கின் விசாரணை மங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT