Published : 12 Aug 2016 03:50 PM
Last Updated : 12 Aug 2016 03:50 PM

நீதித்துறையையும் முடக்க விரும்புகிறீர்களா?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் குறித்த கொலீஜியத்தின் பரிந்துரைகள் மீது மத்திய அரசு உட்கார்ந்து கொண்டு முடக்குவது பற்றி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றம் ஆகிய விவகாரங்களில் கொலிஜீயத்தின் பரிந்துரைகள் மீது அமர்ந்து கொண்டு ஒட்டு மொத்த நீதித்துறையையுமே இயங்க விடாமல் முடக்க விரும்புகிறீர்களா என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், நாங்கள் வலுக்கட்டாயமாக தலையிடுமாறு செய்து விடாதீர்கள் என்று எச்சரிக்கையும் விடுத்தது உச்ச நீதிமன்றம்.

மத்திய அரசு பிரதிநிதியான அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கியிடம் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தெளிவுபடுத்திய போது, “நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றங்கள் குறித்த கொலீஜியம் பரிந்துரைகள் பட்டியல் பற்றிய விவரங்கள் எங்களிடம் உள்ளன, நாங்கள் அதனை உங்களிடம் கொடுக்க முடியும். இதில் கொலீஜியம் உயர் நீதிமன்றத்திற்காக 75 நீதிபதிகளை பரிந்துரைத்துள்ளது. இதில் தலைமை நீதிபதி உட்பட, நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் பற்றிய பட்டியலும் அடங்கும். ஆனால் உங்கள் (மத்திய அரசு) தரப்பிலிருந்து இன்று வரை அது பற்றி எதுவும் நடவடிக்கை இல்லை” என்றார்.

அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, இதற்கு பல முறை “உயர்மட்டப் பார்வைக்கு எடுத்து செல்கிறோம்” என்று உறுதி அளித்தும் பயனில்லை. நீதிபதி டி.எஸ். தாக்கூர், “கோப்புகள் எங்கே என்று எங்களை கேட்க வைக்காதீர்கள். சட்ட ரீதியாக நாங்கள் தலையிட கட்டாயப்படுத்தாதீர்கள். இந்த நீதித்துறையை இயங்க விடாமல் நிறுத்த முயற்சி செய்யாதீர்கள். இது சரியானதல்ல” என்றார் சற்றே காட்டமாக.

மேலும், “எங்களால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் கோப்புகளை எங்களுக்கு திருப்பி அளித்து விடுங்கள். நாங்கள் அதனை மறுபார்வையிடுகிறோம். இது தீர்க்கமுடியாத ஒரு சிக்கல் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த சூழ்நிலையும் கடினமாக மாறிக் கொண்டிருக்கிறது” என்றார்.

இந்த அமர்வில் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திராசுத் ஆகிய நீதிபதிகளும் அடங்குவர், இந்த அமர்வு மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டிய போது, “அனுமதி அளிக்கப்பட்ட அதன் வலுவில் 40% பலத்திலேயே பல உயர்நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. பலர் 13 ஆண்டுகளாக விசாரணைக்காக சிறையில் வாடி வருகின்றனர். அவர்கள் ஆயுள் தண்டனைக் காலம் கழித்து முடியும் வரை நீங்கள் காத்திருக்கப் போகிறீர்களா?

நீதிபதிகள் நியமனம் குறித்த வரைவு தீர்மானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டிருக்கலாம் ஆனால் அதற்காக நியமனங்களையே உறையச்செய்வது கூடாது” என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

அரசின் முந்தைய வரைவுத் தீர்மானத்திற்கு கொலீஜியம் ஆட்சேபணை தெரிவித்திருந்தது. இதில் குறிப்பாக, தேசப்பாதுகாப்பு கருதி பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மாற்றம் கோரும் பிரிவுகள் அடங்கியுள்ளது, கொலீஜியம் வலியுறுத்தினாலும் அரசு ஒருவர் பெயரை தேசப்பாதுகாப்பு காரணங்களுக்காக நீக்கலாம் என்ற பிரிவை கொலீஜியம் எதிர்த்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x