Last Updated : 25 Nov, 2014 04:45 PM

 

Published : 25 Nov 2014 04:45 PM
Last Updated : 25 Nov 2014 04:45 PM

பாக்கெட்டாக மட்டுமே இனி விற்க வேண்டும்: சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை

இளம் வயதினரை பாதிப்புக்குள்ளாக்கும் சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பாக்கெட்டாக மட்டுமே கடைகளில் இனி சிகரெட் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவருவது என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், "புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில், கடைகளில் சிகரெட்டுகளை பாக்கெட்டிலிருந்து பிரித்து தனியாக (உதிரியாக) சில்லறை விற்பனை செய்யப்படும் போக்கு காரணமாகவே அதிக பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இளம் வயதினருக்கு சிகரெட்களை விற்பனை செய்வதற்கு ஏற்கெனவே தடை உள்ள நிலையில், சிகரெட்டுகளை உதிரிகளாக விற்பனை செய்யப்படுவதால், அதனை இளம் வயதினர் வாங்குவதற்கு எளிதில் வழிவகுக்கப்படுகிறது. இதனால், கடைகளில் தனியாக சிகரெட்டுகளை விற்பனை செய்ய தடை விதித்தால், புகைப்பழக்கத்துக்கு சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் அடிமையாவதை தவிர்க்கலாம் என்று நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பரிந்துரையை சுகாதார அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான வரைவை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக கொண்டுவரப்பட்டு, இதற்கான தடை மசோதா நிறைவேற்றப்படும்" என்றார் அவர்.

இந்த முடிவை அரசு செயல்படுத்தினால், கடைகளில் இனி சிகரெட்டுகள் பாக்கெட்டாக மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x