Published : 03 Nov 2014 08:46 AM
Last Updated : 03 Nov 2014 08:46 AM
நிலப் பேர முறைகேடு புகார் குறித்து கேள்வி எழுப்பிய நிருப ரிடம் ராபர்ட் வதேரா கடுமையாக கோபப்பட்டார். நிருபரின் மைக்ரோபோன் மைக்கை அவர் தட்டிவிட்டு சென்றார்.
ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நகர்ப்புற மேம்பாட்டுச் சட்ட விதிகளை மீறி 2005 முதல் 2012 வரை 21,366 ஏக்கர் விவசாய நிலங்களில் 100 குடியிருப்புகளை கட்ட உரிமங்கள் வழங்கப்பட்ட தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ஆதாயம் அடைந்தன. இதன் மூலம் ஹரியாணா அரசுக்கு ரூ.3.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆட்சியின்போது நடைபெற்ற நிலப் பரிவர்த்தனை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அந்த மாநிலப் முதல்வர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் தொலைக்காட்சி நிருபர் டெல்லி யில் நேற்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த வதேரா, நிருபரை பார்த்து ‘நீங்கள் முட்டாளா?’ என்று கேட்டார். பின்னர் நிருபரின் மைக்ரோபோன் மைக்கை தட்டிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார்.
நிருபரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வதேராவின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மன்னிப்பு கோர வேண்டும்- பாஜக
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறியபோது, ‘‘பத்திரிகையாளர் களை தாக்குவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும், நிருபரை அவமதித்த வதேரா பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி. ராஜா கூறியபோது, `‘ராபர்ட் வதேராவின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது, இதுகுறித்து செய்தி, ஒலிபரப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
மிகைப்படுத்தப்படுகிறது- காங்கிரஸ்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியபோது, ‘‘ராபர்ட் வதேரா விவகாரம் ஊடகங்களில் மிகைப்படுத்தப் படுகிறது. தனிநபரை ஊடகங்கள் தொடர்ந்து தொந்தரவு செய்வது ஏன் என்பது புரியவில்லை'' என்று தெரிவித்தார்.
சட்டம் தன் கடமையைச் செய்யும்
ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ராபர்ட் வதேரா நிலப் பரிவர்த்தனை விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும், இரும்புக் கரம் கொண்டு ஊழல் ஒடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஹரியாணா மூத்த அமைச்சர் அனில் விஜ் கூறியபோது, "ராபர்ட் வதேரா தனது ஊழல் விவகாரத்தை மறைக்க விரும்புகிறார், அதனால்தான் அதுகுறித்து கேட்கும்போது அவருக்கு கோபம் வருகிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT