Published : 20 Sep 2016 02:38 PM
Last Updated : 20 Sep 2016 02:38 PM
ஜெய்ஷ்-இ-மொகமது அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் யூரியில் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. தீவிரப்படுத்துகிறது.
தீவிரவாதிகளின் மரபணு மாதிரிகளை சேகரிக்கும் என்.ஐ.ஏ., பதான்கோட் தாக்குதலுக்கும், யூரி தாக்குதலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராயவுள்ளது.
பதான்கோட் தாக்குதலுக்கான சாட்சியங்கள் குறித்த நீதிசார் கோரிக்கையை பாகிஸ்தானிடம் என்.ஐ.ஏ. வைத்திருந்தும் ஒரு பதிலும் அங்கிருந்து வராத நிலையில், இந்தத் தாக்குதல் விசாரணையையும் என்.ஐ.ஏ. கையில் எடுத்துள்ளது.
“இத்தகைய கோரிக்கை கடிதங்கள் ஒன்பது பாகிஸ்தானிடம் பதிலில்லாமல் உள்ளன” என்று மூத்த என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“கடந்த 2, 3 ஆண்டுகளில் 9 சந்தர்ப்பங்களில் சாட்சியங்கள் கோரி பாகிஸ்தானுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளின் கைவரிசை இந்தத் தாக்குதல்களில் இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். புள்ளிகளை இணைக்க வேண்டும், ஆனால் பாகிஸ்தான் எந்த ஒரு தகவலையும் அளிக்க மறுத்து வருகிறது” என்கிறார் அதே என்.ஐ.ஏ. அதிகாரி.
பதான்கோட் தாக்குதல் குறித்து விசாரிக்க பாகிஸ்தானிலிருந்து கூட்டு விசாரணைக்குழுவை இந்தியா வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாகிஸ்தான் உதவி இருக்கிறது என்று தெரிந்தாலும், அதற்கான சாட்சியங்களை அளிப்பதில் பாகிஸ்தான் பின்வாங்கி வரும் நிலையில், யூரி தாக்குதல் குறித்த என்.ஐ.ஏ. விசாரணை எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றே இது தொடர்பான நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, காஷ்மீரின் யூரி பகுதியில் பணி முடிந்து திரும்பிய ராணுவ வீரர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்த முகாம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந் தனர். 23 பேர் காயமடைந்தனர். சிகிச்சை பெற்றுவந்த சிப்பாய் கே. விகாஸ் ஜனார்தன் நேற்று உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அதில், பாகிஸ்தானை ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இருந்து தூதரக ரீதியில் தனிமைப்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT