Published : 24 Feb 2014 08:58 PM
Last Updated : 24 Feb 2014 08:58 PM

உடைந்தது லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்: 7 எம்.எல்.ஏ.க்கள் விலகினர்

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி உடைந்தது. மொத்தமுள்ள 22 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து விலகியதாக தகவல்கள் பரவின. ஆனால் அதில் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது விலகலை மறுத்தனர்.

13 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் உதய் நாராயண் சௌத்ரிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். எம்.எல்.ஏ. சாம்ராட் சௌத்ரி தலைமையில் ராகவேந்திர பிரதாப் சிங், அனிருத் குமார், ஜிதேந்திர ராய், அக்தர் உல் இமான், ஜாவேத் இக்பால் அன்சாரி, ராம் லகன் ராம் ராமன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் லாலு கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

குற்றச்சாட்டு

கட்சி உடைப்பு குறித்து சாம்ராட் கூறியதாவது: ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை கடந்த 3 மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் கிளை அணியாக லாலு மாற்றி விட்டார். தன்னைச் சிறைக்கு அனுப்பிய காங்கிரஸ் கட்சியை அவர் பிரதானமாக எண்ணுகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதற்குப் பதிலாக, அக்கட்சியுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை லாலு இணைத்து விடலாம். அதுதான் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.

6 பேர் மறுப்பு

13 எம்.எல்.ஏ.க்கள் விலகியதாக முதலில் கூறப்பட்டாலும், இதனை 6 எம்.எல்.ஏக்கள் மறுத்துள்ளனர். லலித்யாதவ், அக்தர் உல் இஸ்லாம் சாஹின், அப்துல் கபூத், சந்திரசேகர், துர்கா பிரசாத் சிங், பையாஸ் ஆகிய 6 பேர், ‘பேரவைத் தலைவருக்கு அளிக்கப்பட்ட கடிதத்தில் தங்களின் கையொப்பம் போலியாக இடப்பட்டதாகக்’ குற்றம்சாட்டியுள்ளனர்.

மொத்தம் 243 இடங்களைக் கொண்ட பிஹார் சட்டப் பேரவையில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு பேரவைத் தலைவர் உள்பட 116 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 7 பேர் சேர்ந்துள்ளதன் மூலம் அக்கட்சிக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x