Published : 13 Feb 2014 10:00 AM
Last Updated : 13 Feb 2014 10:00 AM
ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற பாஜக முன்வந்துள்ளது.
ஆனால், சீமாந்திரா பகுதிக்கு சிறப்பு நிதியுதவியை அறிவித்தால்தான் தங்களின் ஆதரவு கிடைக்கும் என்று அக்கட்சி தெரிவித்துவிட்டது.
தெலங்கானா விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், பாஜகவின் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக பாஜக தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை பேச்சு நடத்தினார். பிரதமர் வீட்டில் நடைபெற்ற மதிய விருந்தில் பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோனி, ப.சிதம்பரம், கமல்நாத், சுஷீல் குமார் ஷிண்டே ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது தெலங்கானா தொடர்பான தங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்பான மசோதாவை ஆதரிக்க தயாராக உள்ளோம். ஆனால், சீமாந்திரா பகுதிக்கு சிறப்பு நிதியுதவி அளிப்பது தொடர்பாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். அதை பிரதமர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, நிதியுதவி அளிப்பது தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும். அது தொடர்பான விவரங்களை தெலங்கானா மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதோடு, அவை நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள்தான் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவது ஆளும் கட்சியின் பொறுப்பு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பின்னர், மதக்கலவரத் தடுப்பு மசோதா, ஊழல் தடுப்பு மசோதாக்கள் போன்றவையும் நிறைவேற்ற முடியாமல் இருப்பது குறித்து பிரதமர் பேசியுள்ளார். ஆனால், அந்த மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக உறுதியான கருத்து எதையும் பாஜக தலைவர்கள் தெரிவிக்கவில்லை. - பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT