Published : 04 Oct 2013 05:10 PM
Last Updated : 04 Oct 2013 05:10 PM
நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறவுள்ள டெல்லி உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில், வேட்பாளரை நிராகரிப்பதற்கான 'நோட்டா' வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
'மேற்குறிப்பிட்டுள்ளவர்களில் எவருமில்லை' எனப் பொருள்தரும் 'நோட்டா' (NOTA-None Of The Above) பட்டன், வாக்குப்பதிவு எந்திரத்தில், கடைசி வேட்பாளர் பெயருக்குக் கீழே பொருத்தப்பட்டிருக்கும்.
டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.கே.சம்பத் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார்.
சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்குள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு நவம்பர் 11 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அடுத்த கட்டமாக 72 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 19-ம் தேதி நடைபெறும்.
மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 25-ம் தேதி நடைபெறும். டிசம்பர் 1-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். டெல்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மிசோராமின் 40 தொகுதிகளுக்கும் டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும்.
ஏற்காடு இடைத் தேர்தல்
டிசம்பர் 4-ல் குஜராத்தின் சூரத் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் தமிழகத்தின் ஏற்காடு தனி தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும். இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் 632 தொகுதிகளுக்கான முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
'நோட்டோ' பட்டன்
"உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி, வேட்பாளரை நிராகரிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு வசதியாக அதற்குரிய 'நோட்டா' பட்டன் வாக்குப் பதிவு எந்திரத்தில் முதன்முறையாக பொருத்தப்படவுள்ளது" என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.கே.சம்பத் தெரிவித்தார்.
தங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், வாக்காளர்கள் இந்த நோட்டா பட்டனை நாடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment