Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM
ஆந்திர மாநிலத்தில் முன்விரோதம் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகளை உறவினரே கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிசாமாபாத் மாவட்டம் தூபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி ரெட்டி (45). இவர் தனது குடும்பத்தினருடன் நிசாமாபாத் நகரில் வசித்து வருகிறார். இவருக்கு, மனைவி மற்றும் சிரி (9), அக்ஷயா (6), குஷி (4) என்கிற மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன்.
மகள்களில் இருவர் ஹைதராபாத்தில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சுப நிகழ்ச்சிக்காக பெற்றோரிடம் வந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண் டிருந்த மூன்று சகோதரிகளை அவர்களது தூரத்து உறவினரான நரேந்திரா ரெட்டி என்பவர் சாக்லெட் வாங்கி தருவதாகக் கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். இதனை அப்பகுதியில் சிலர் பார்த்துள்ளனர்.
விளையாடிக் கொண்டிருந்த மூன்று பேரையும் காணாததால் அவர்களது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் பல இடங்களில் இரவு முழுக்க தேடி உள்ளனர்.
இந்நிலையில், ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் மூன்று சிறுமிகளின் சடலங்கள் எரிந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சடலங்களை சிறுமியின் பெற்றோர் அடையாளம் காட்டி கதறி அழுதனர். பின்னர் போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிசாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, நகருக்கு வெளியே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நரேந்திராவின் காரை போலீஸார் சோதனையிட்டனர்.
அதில் பூச்சி மருந்து பாட்டில் மட்டும் இருந்தது. ஆதலால் கடத்திச் சென்ற நரேந்திரா ரெட்டி தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT