Published : 21 Apr 2014 05:27 PM
Last Updated : 21 Apr 2014 05:27 PM

டைட்லருக்கு நற்சான்றா?- டெல்லி காங். அலுவலகத்தில் சீக்கியர்கள் முற்றுகை

1984 சீக்கிய கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லருக்கு தொடர்பு இல்லை என்று கூறிய அமிர்தசரஸ் தொகுதி வேட்பாளர் அம்ரீந்தர் சிங்கின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை சீக்கியர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

அமிர்தசரஸ் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான அம்ரீந்தர் சிங் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "டெல்லியில் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் டைட்லருக்கு தொடர்பு கிடையாது" என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். அவர்கள் டைட்லர் குற்றமற்றவர் எனச் சான்று வழங்கிய அம்ரீந்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோஷமிட்டனர்.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், 70 போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஒருவர் கூறுகையில், "அம்ரீந்தர் கூறிய கருத்துக்கு நாங்கள் இந்தத் தேர்தலின் மூலம் பதில் தருவோம். நாங்கள் இங்கே முற்றுகையிட்டதற்கு காரணம், காங்கிரஸ்காரர்கள் என்பதால் மட்டுமே.

அம்ரீந்தருக்கு அமிர்தசரஸ் தொகுதியை ஒதுக்கியதற்கும், ஜெகதீஷ் டைட்லருக்கும் நற்சான்று வழங்கியதற்கும் சோனியாவும் ராகுலும் பதில் கூறியாக வேண்டும்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x