Published : 17 Aug 2016 03:45 PM
Last Updated : 17 Aug 2016 03:45 PM
முழு மதுவிலக்கு அமலில் இருக்கும் பிஹாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி குறைந்தது 12 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது, ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.
கடந்த செவ்வாயன்று கோபால்கஞ்சில் உள்ள ஹர்குவா என்ற பகுதியில் 5 பேர் வாந்தி பேதி புகாரின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர், மேலும் புதன் காலை 5 பேர் பலியானதாகவும் செய்திகள் வெளியாகின.
செவ்வாயன்று மதியம் ஹர்குவா பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதாக இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினர் இவ்வாறு கூற கோபால்கஞ்ச் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் ராகுல் குமார் இவர்கள் சாவுக்கு கள்ளச்சாராயம் காரணமல்ல என்று கூறியுள்ளார். கோபால்கஞ்ச் பகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிரஞ்சன் குமாரும் இதனை மறுக்க தற்போது 3 நபர் கமிட்டி இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் ஒரே நாளில் பலியானது ஒரு தற்செயலே என்கிறது போலீஸ்.
முழு மதுவிலக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலாக்கப்பட்டவுடன் மாநிலத்தில் ஆங்காங்கே கள்ளச்சாராய சாவுகள் பற்றிய செய்திகள் வெளியாகி வந்தன, ஆனால் மாவட்ட நிர்வாகம் ‘மருத்துவ அறிக்கைகளை’ காட்டி இந்த பலிகளை சாராய பலி அல்ல என்று மறுத்து வருகிறது.
ஏற்கெனவே ககாரியா, சஹர்ஷா, மற்றும் பாட்னா நகரில் கள்ளச்சாராயத்திற்கு ஒருசிலர் பலியானதாக செய்திகள் வெளியாகின, ஆனால் நிர்வாகம் இதனை மறுத்து வருவது அங்கு வாடிக்கையாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT