Published : 03 Nov 2014 08:37 AM
Last Updated : 03 Nov 2014 08:37 AM
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் முழுவதும் மீட்கப்படுவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் வானொலியில் 20 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:
கடந்த முறை பேசியபோது, அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இந்த ஒரு மாத காலத்தில் காதி பொருட்களின் விற்பனை 125 சதவீதம் உயர்ந்துள்ளதாக அத்துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருப்பு பணத்தை மீட்கும் விஷயத்தில் என் மீது நம்பிக்கை வையுங்கள். வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காசும் மீட்கப்படும். இந்த நாட்டின் ஏழைகளுக்கு சென்று சேரவேண்டிய அப்பணத்தை மீட்பதில் நான் உறுதியாக இருக்கி
றேன். உங்களின் முதன்மை சேவகனான என் மீது நம்பிக்கை வையுங்கள். கருப்பு பணத்தை மீட்கும் நடைமுறை தொடர்பாக வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், எனது அறிவுக்கு எட்டியவகையில் நாங்கள் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம்.
வெளிநாடுகளில் எவ்வளவு கருப்பு பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் கணக்கிட முடியாது. முந்தைய அரசிடமும் அது தொடர்பான மதிப்பீடு இருந்ததில்லை. ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த அனுமானத்தின்படி கருப்பு பணத்தின் அளவை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை எத்தனை கோடியாக இருந்தாலும் சரி, அதை கண்டிப்பாக மீட்க நடவடிக்கை எடுப்பேன். எனது முயற்சியில் எந்தவிதமான தாமதமும் இருக்காது. எனது முயற்சி வெற்றி பெறஉங்களின் ஆசியை வேண்டுகிறேன்.
தூய்மையான இந்தியா திட்டத்தில் பிரமுகர்கள் பலரும், பொதுமக்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். என்னை சந்திக்கும் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் சமூக நலன் சார்ந்த விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்துகின்றனர்.இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT