Published : 22 Apr 2017 09:33 AM
Last Updated : 22 Apr 2017 09:33 AM
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அழகிய மலைப் பகுதியான மூணாறிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அரசு நிலங்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்கப் பட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள் ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன், சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் புகார் தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் இந்த விவ காரத்தைப் பெரிதாக எழுப்பினார்.
இதன் காரணமாக ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணிக்காக சார் ஆட்சியர் ராம் வெங்கட்ராமன் (30) நியமிக்கப்பட்டார். ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 2-ம் பிடித்த இவர் தான் தற்போது ஆக்கிரமிப்பு மாஃபியாக்களை அச்சப்பட வைத்திருக்கிறார்.
நேரடியாக களமிறங்கி அரசியல் குறுக்கீடுகளையும் பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்பு களை அகற்றினார். குறிப்பாக மூணாறு அருகே சித்தராபுரத்தில் அரசு சமூக சுகாதார மையத்துக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுத்தார். இதனால் மக்கள் மத்தியில் இவர் பிரபலமடைந்து வருகிறார். அதேசமயம் மாஃபியா கும்பல் இவரைத் தொடர்ந்து மிரட்டி வருகிறது.
பாப்பாத்தி சோலை பகுதியில் 17 அடி உயரத்தில், ஒரு டன் எடையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டதாக கூறப்படும் சிலுவையை ராம் அகற்றினார். மேலும் முன் அனுமதியின்றி அங்கு சிலுவை அமைத்த ஸ்கரியா என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்தார். இதற்கு கிறிஸ்தவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தொடக்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் உறுதியுடன் இருந்த முதல்வர் பினராயி விஜயனும், தற்போது, ‘‘இது என்ன சிலுவை போரா? கோவில், தேவாலயம், மசூதியை இடிப்பது இடதுசாரி ஆட்சிக் கொள்கை அல்ல’’ என விமர்சித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை இடதுசாரி ஜனநாயக கூட்டணி கட்சியின் அவசரக் கூட்டம் நடந்தது. இதில் பினராயி விஜயன், “சிலுவை அகற்றியதை கோடிட்டு காட்டி, இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை நிகழ்ந்திருந்தால் எப்படி சமாளித்திருப்போம். விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்” எனவும் தெரிவித்தார். இதனால் மூணாறில் ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT