Published : 04 Jun 2016 08:21 AM
Last Updated : 04 Jun 2016 08:21 AM
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக மீண்டும் ரூ.50 டோக்கன் தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மட்டும் இந்த வசதியை பயன்படுத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமலை, திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் கலந்து கொண்டு பக்தர்கள் முறையிடும் புகார்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூரு பக்தர் தெரிவித்த ஆலோசனையின் அடிப்படையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான இலவச பேருந்துகளில் தங்கும் அறைகளின் அப்போதைய நிலவரம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், தரிசன நேரம் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் ஒலி பெருக்கி மூலம் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் அலைச்சல் குறையும். ரூ.50 டோக்கன் தரிசன முறையை மீண்டும் கொண்டு வருமாறு ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி இம்மாத தொடக்கத்தில் இருந்து மாலையில் மட்டும் ரூ.50 டோக்கன் தரிசன முறையை செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.
கோடை விடுமுறை முடியும் தருவாயில் இருப்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இலவச தரிசனத்துக்காக 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதத்தில் இருந்து ஆன்லைன் மூலம் சுப்ரபாதம் 6,426, தோமாலை சேவை, அர்ச்சனை தலா 120, விசேஷ பூஜை 1,497, பிரம்மோற்சவம் 6,450 உட்பட 56,640 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. இதற்கான விற்பனை இன்று காலை 11 மணி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT