Last Updated : 13 Feb, 2014 12:00 AM

 

Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM

டிராக்டரில் திருமணத்துக்குச் சென்றவர்கள் மீது லாரி மோதி 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

கர்நாடகத்தில் டிராக்டரில் திருமணத்திற்கு சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டம் முந்தரகி தாலுகாவில் மேவூண்டி கிராமம் உள்ளது. இதன் அருகில் இருக்கும் குக்கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 35-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக புதன்கிழமை தம்பளா என்ற கிராமத்துக்கு டிராக்டரில் சென்றுள்ளனர். மணமகள் காஞ்சனா (20), மணமகன் ஹனுமந்தப்பா (27) ஆகியோரும் இதே டிராக்டரில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தம்பளா செல்லும் வழியில் டிராக்டர் மீது எதிரில் வந்த லாரி மோதியது. இதில் டிராக்டர் முற்றிலும் சேதமடைந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சஞ்சனா (4), மஞ்சுளா (7) சுதீப் (6) ஆகிய 3 குழந்தைகளும், ஹனுமந்தவ்வா (26) என்ற பெண்ணும் அதே இடத்தில் இறந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கதக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து கதக் மாவட்ட போலீஸார் கூறுகையில், “இந்த விபத்தில் 3 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 10 பேர் இறந்துள்ளனர். மணமகள் காஞ்சனாவுக்கு முதுகில் காயமும், கால் முறிவும் ஏற்பட்டுள்ளது.

மணமகன் உள்ளிட்ட சிலர் சிறு காயங்களுடன் தப்பிவிட்டனர். விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவரும் அதில் வந்தவர்களும் தப்பியோடிவிட்டனர். லாரி உரிமையாளரை கைது செய்யும் பணி நடந்து வருகிறது” என்றார்.

சரக்கு வாகனங்கள் சட்டத்துக்கு புறம்பாக ஆள்களை ஏற்றிச் செல்வதும், இவை விபத்தில் சிக்குவதும் கர்நாடகத்தில் தொடர்கிறது. கடந்த வாரம் ஹூப்ளியில், மதராஸா அரபிக் பள்ளி மாணவர்கள் பயணித்த லாரி விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x