Published : 06 Mar 2014 01:33 PM
Last Updated : 06 Mar 2014 01:33 PM

விரைவில் கிராமங்களில் பாஸ்போர்ட் சேவை

வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இ-கவர்னன்ஸ் சேவை நிறுவனம் இணைந்து, பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுச் சேவை மையங்கள் மூலம் கிராமப்புறங்களில் தொடங்கவுள்ளது.

உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள 15 தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் சேவை மையங்களில், சோதனை முயற்சியாக இம்மாத இரண்டாம் வாரம் இந்தச் சேவை துவங்கப்படுகிறது. மார்ச் மாத இறுதிக்குல், நாடு முழுவது இந்த சேவை தொடங்கப்படும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாதவர்களுக்கு இம்முயற்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். இ-கவர்னன்ஸ் சேவை நிறுவனம், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவே.

நாடு தழுவிய அளவில், கிராமப்புறங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இணைய வசதியுள்ள பொதுச் சேவை மையங்களை தொடங்குவதற்கு, செப்டம்பர் 2006-ஆம் ஆண்டு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.

விவசாயம், மருத்துவம், கல்வி, வங்கிச் சேவை, காப்பீடு, ஓய்வூதியம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அரசு, தனியார் மற்றும் பொத்துறை சேவைகளை இந்தச் சேவை மையங்கள் மூலம் கிராம மக்களுக்கு அளிப்பதே இவை தொடங்கப்பட்டதன் நோக்கம்.

இந்த வரிசையில், பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் சேவையில், இணையம் மூலமாகவே முழு படிவத்தையும் பூர்த்தி செய்வதோடு, கட்டணத்தை செலுத்துவதையும் அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.

பொதுச் சேவை மையங்கள் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தை இணையத்தில் பதிவேற்றுவது, கட்டணத்தை செலுத்துவது (டெபிட், கிரெடிட் அல்லது பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கு மூலம்) மற்றும் பாஸ்போர்ட் சேவை மைய அதிகாரியைச் சந்திப்பதற்கான நேரத்தை திட்டமிடுவது போன்ற சேவைகளை ரூ.100-க்கு அளிக்கவுள்ளது.

பொதுச் சேவை மையங்களின் செயல்பாடு, வார இறுதி நாட்களோடு சேர்த்து 7 நாட்களும் செயல்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x