Published : 24 Jan 2014 09:00 PM
Last Updated : 24 Jan 2014 09:00 PM

நடத்தை விதிமீறல்: கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

மதரீதியில் வாக்களிக்கச் சொல்லி பிரச்சாரம் செய்ததற்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜ்ரிவாலுக்கு, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் மாதம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியினர், மக்களிடம் மதரீதியாக வாக்களிக்குமாறு பிரசுரம் விநியோகித்ததாக பாஜக தலைவர் ஹரிஷ் குரானா புகார் அளித்தார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இதையொட்டியே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் மற்றும் ஆணையர் பிரம்மா, சைதி ஆகியோர் அடங்கிய குழு இந்த புகாரையும், அதற்கு கேஜ்ரிவால் அளித்த பதிலையும் விசாரித்தது. "உங்களது பதிலில், மக்களுக்குக் கொடுத்த பிரசுரங்களைப் பற்றி நியாயப்படுத்தியிருந்தாலும், குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைத்து, நீங்கள் ஆம் ஆத்மிக்கு வாக்கு சேகரிக்க முயன்றது உண்மையே. அது தேர்தல் நடத்தை விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி விதி மீறல் ஆகும். நீங்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. எனவே உங்கள் கட்சியின் வரும் தேர்தல் பிரச்சாரங்களில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறோம்" என அவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக, கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குமார் குப்தா கையெழுத்திட்ட பதில் ஒன்றை அனுப்பியிருந்தார். அதைத் தேர்தல் ஆணையம் கடுமையாகக் கண்டித்து, கேஜ்ரிவால் கையெழுத்திட்ட பதிலைத் தருமாறு பணித்ததைத் தொடர்ந்து, அவர் தனது கையொப்பமிட்ட பதிலை அளித்தார்.

அந்த பதிலில், கேஜ்ரிவால், தேர்தல் விதிமுறைகளை தான் மீறவில்லை என்று கூறியிருந்தார். நீதிமன்ற அறிவிப்புகளை சார்ந்தும், சச்சார் கமிட்டி, மற்றும் ரங்கனாத் மிஷ்ரா கமிட்டிகளின் அறிக்கைகளை ஒட்டியே பிரசுரத்தின் தகவல்கள் இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஆணையத்திற்கு தந்த பதிலில், அந்த பிரசுரத்தை முழுதாகப் படித்தால் நாங்கள் சொல்ல வருவது புரியும். ஜனநாயகம் பரவலாக எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும் என்கிற எங்களது தத்துவத்தை தான் வலியுறுத்தியுள்ளோம். சமுதாயத்தில் மதநல்லிணக்கம் பேணப்படவேண்டும், ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இரு பிரிவினரிடையே வெறுப்பை உருவாக்குவது அல்ல எனக் கூறியிருந்தார். ஆனால் ஆணையம் கேஜ்ரிவாலின் வாதத்தை நிராகரித்தது.

அந்த ஹிந்தி பிரசுரத்தில் இருந்த வார்த்தைகள் பின்வருமாறு:

"வரும் தேர்தலில், டெல்லியில் இருக்கும் முஸ்லிம்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டும். நாங்கள் பதவிக்காகவோ, பணத்திற்காகவோ வாக்கு கேட்கவில்லை. ஊழலை ஒழிக்கவும், ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்கி, அதில் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழவும் வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். பா.ஜ.க ஒரு மதவாதக் கட்சி. இது நாள் வரை முஸ்லிம்களுக்கு, வாக்களிக்க வேறு மாற்றுக் கட்சி இல்லை. ஆனால் இப்போது ஆம் ஆத்மியின் வடிவில் ஒரு நேர்மையான கட்சி உள்ளது. அப்பழுக்கற்ற அரசியல் என்கிற எங்களது கொள்கைக்கு ஆதரவு அளிக்குமாறு முஸ்லிம் வாக்காளர்களைக் கேட்டு கொள்கிறோம். 65 வருடங்களாக நீங்கள் விழுந்து வரும் பொறியில் மீண்டும் விழ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x