Published : 15 Feb 2014 09:01 PM Last Updated : 15 Feb 2014 09:01 PM
டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும், சட்டமன்றத்தை முடக்கி வைக்கவும் மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
ஜன்லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாததால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போது சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த துணைநிலை ஆளுநரிடம் அவர் பரிந்துரைத்தார். ஆனால் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை மட்டும் ஏற்றுக் கொண்ட துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், டெல்லி சட்டமன்றத்தைக் கலைக்காமல் முடக்கிவைக்கவும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் நோக்கர்கள், "எதிர்காலத்தில் ஏதாவது ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணி டெல்லியில் ஆட்சி அமைக்க ஏதுவாக சட்டமன்றத்தைத் கலைக்காமல், முடக்கிவைக்க மட்டுமே துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துணைநிலை ஆளுநரின் அறிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் சட்டமன்றத்தை முடக்கி வைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மத்திய அமைச்சரவையின் முடிவு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தைக் கலைக்க ஆம் ஆத்மி அரசு அளித்த பரிந்துரையை ஏற்காமல் சட்டமன்றத்தை முடக்கிவைக்க மட்டுமே துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதற்கு அரவிந்த் கேஜ்ரிவால் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: எங்கள் அரசின் பெரும்பாலான முடிவுகளை துணைநிலை ஆளுநர் ஏற்கவில்லை. இப்போது சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற எங்களது பரிந்துரையையும் நிராகரித்துள்ளார். ஆ
ம் ஆத்மி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. எங்கள் அரசின் பரிந்துரையை அவர் நிச்சயமாக ஏற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் வெளிப்படையாக சட்டத்தை மீறிச் செயல்படுகிறார். சட்டமன்றத் தேர்தலை மீண்டும் நடத்த பாஜகவும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நஜீப் ஜங் எந்த அடிப்படையில் முடிவு எடுத்தார் என்பது தெரியவில்லை.
டெல்லி சட்டமன்றத்துக்கு புதிதாகத் தேர்தலை நடத்த காங்கிரஸ் விரும்பவில்லை. அந்தக் கட்சியின் விருப்பத்தின் பேரில்தான் துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
பிரதமர் வேட்பாளரா? - கேஜ்ரிவால் மறுப்பு
டெல்லி முதல்வர் பதவியை கேஜ்ரிவால் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆலோசனைக் கூட்டம் டெல்லி திலக் மார்க்கில் உள்ள கேஜ்ரிவாலின் வீட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய்சிங் நிருபர்களிடம் கூறியதாவது: ஹரியாணாவின் ரோஹ்தாக்கில் பிப்ரவரி 23-ம் தேதி கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை கேஜ்ரிவால் தொடங்கி வைப்பார்.
இதை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கேஜ்ரிவால் கலந்துகொள்வார். கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளைமுதல் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்றார். இதற்கிடையே பிரதமர் பதவி போட்டியில் தான் இல்லை என்று கேஜ்ரிவால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
WRITE A COMMENT