பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் மன்மோகனுடன் சந்திப்பு

பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் மன்மோகனுடன் சந்திப்பு

Published on

பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு விவகாரங்கள் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், பிரதமர் மன்மோகன் சிங்கை புதன்கிழமை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற 11-வது ஆசிய-ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள அஜிஸ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, இந்தியா வின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் மட்டுமே இரு நாடுகளுக்கிடையிலான ஆக்கப்பூர்வமான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும் என அஜிஸிடம், குர்ஷித் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

எல்லையில் அமைதியை நிலைநாட்டவும், பதற்றத்தைத் தணிக்கவும் இரு நாட்டு ராணுவ இயக்குநர் ஜெனரல்களும் (டிஜிஎம்ஓ) சந்தித்துப் பேச வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் வலியுறுத்தின.

மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் கேட்ட அனைத்து ஆதாரங்களும் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதுதொடர்பான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, காஷ்மீர் பிரிவினைவாத குழுக்க ளின் தலைவர்களையும் அஜிஸ் சந்தித்துப் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in