Published : 27 Apr 2014 12:00 PM
Last Updated : 27 Apr 2014 12:00 PM
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சால், தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெயசுதா, விஜயசாந்தி உள்ளிட்டோர் முதல்வர் கனவு காணத் தொடங்கி உள்ளனர்.
ராகுல் காந்தி, கடந்த 2 நாட்களுக்கு முன் தெலங்கானா பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தெலங்கானாவை வழங்கியது காங்கிரஸ் கட்சிதான். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், புதிதாக உதயமாகும் தெலங்கானா மாநிலத்தில், ஒரு பெண் தான் முதல்முறையாக முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்” என பகிரங்கமாக அறிவித்தார். இதனால் மேடையில் இருந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
இந்நிலையில் தெலங்கானா மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் களத்தில் உள்ள நடிகைகள் ஜெயசுதா, விஜயசாந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கீதா ரெட்டி, டி.கே. அருணா, சுனிதா லட்சுமி ரெட்டி ஆகியோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சி, முதல்வர் வேட்பாளராக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆர். கிருஷ்ணய்யாவை அறிவித்துள்ளது. டி.ஆர்.எஸ். கட்சி சார்பில் தலித் ஒருவரை முதல்வர் ஆக்குவோம் என்று அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியோ பெண்களை கவரும் வகையில் ‘பெண் முதல்வர்’ என அறிவித்துள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அடுத்த முதல்வர் யார் என்று அக்கட்சியிலும், பொது மக்களிடையேயும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT