Last Updated : 29 Jan, 2014 12:00 AM

 

Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு- தமிழகத்திலிருந்து யாரையும் நிறுத்தவில்லை

பிப்ரவரி 7-ல் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு கிடைக்காததால் தமிழகத்தி லிருந்து வேட்பாளர் யாரையும் அந்த கட்சி நிறுத்தவில்லை.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று அமேதியின் சஞ்சய்சிங், மத்திய அமைச்சர் ஷெல்ஜா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டனர்.

மாநிலங்களவைத் தேர்தலுக் கான வேட்பு மனு தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும். மனு மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 31 கடைசி.

மார்ச்சில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிகிறது. இவற்றில் காங் கிரஸ் தரப்பில் 18 இடங்கள் காலியாகிறது. இதில், அந்தக் கட்சி வெறும் 14 வேட்பாளர்களை மட்டும் அறிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து தேர்வான மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், அந்த இடங்களுக்கு காங்கிரஸ் யாரையும் நிறுத்தவில்லை. மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி முடிவாகாமல் இருப்பதே இதற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

இது குறித்து டெல்லியில் காங்கிரஸ் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறியதாவது: தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆதரவளிப்பதாக தெரிவித்ததன் பேரில், மாநிலங் களவை உறுப்பினர் பதவிக்கு தமிழகத்திலிருந்து வாசனை மட்டும் மீண்டும் நிறுத்த முயற்சிக் கப்பட்டது. அதற்குள், திமுக சார்பில் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவரை வாபஸ் செய்யும்படி கோரினால், திமுகவுடனான மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை பாதிக்கும் என்பதால் விட்டுவிட்டோம்’ எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் குமாரி ஷெல்ஜா மற்றும் அமேதியைச் சேர்ந்த சஞ்சய்சிங் ஆகியோர் மனு தாக்கலுக்கு கடைசி நாளான செவ்வாய்க்கிழமை அறிவிக்கப் பட்டனர்.

இதற்கு முன்தினம், காங்கிரஸ் பொது செயலாளர்களான திக்விஜய்சிங் மற்றும் மதுசூதன் மிஸ்திரி உட்பட 12 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டனர். இவர்களில், முரளி தியோரா, மோதிலால் வோரா மற்றும் ரஞ்சிப் பிஸ்வால் ஆகியோரும் அடங்குவர்.

காங்கிரஸின் வேட்பாளர்களில், குமாரி ஷெல்ஜாவை தவிர அனைவரும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்.

ஷெல்ஜாவை அறிவித்ததன் மூலம், முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், ஹரியாணாவி லிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

ஷெல்ஜா ராஜினாமா

சமூக நீதித்துறை அமைச்சர் பதவி வகித்த குமாரி ஷெல்ஜா தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திங்கள்கிழமை இரவு ஒப்படைத்தார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x