Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

அமைச்சர்களுக்கு சுழல் விளக்கு, போலீஸ் பாதுகாப்பு கிடையாது: கேஜ்ரிவாலின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தனது அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களுக்கு சிவப்பு விளக்கு மற்றும் அதன் பின் தொடரும் பாதுகாப்பு போலீஸார் யாருக்கும் கிடையாது என டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது, அந்த மாநில முதல் அமைச்சராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்றவுடன் நடந்த முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

டெல்லியில் காவலரின் வாகனங்கள் பாதுகாப்புக்காக பின் தொடர, வாகனத்தில் சுழல் விளக்கு, சைரனுடன் வலம் வருவதை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பெருமையாக கருதி வந்தனர்.

இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டனர். அதோடு, காவல் நிலையத்தில் பணியாற்ற வேண்டிய போலீஸாரின் எண்ணிக்கையும் குறைந்தது.

இந்நிலையில், டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவியேற்ற அர்விந்த் கேஜ்ரிவால், வாகன சுழல் விளக்கு கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

பதவியேற்றவுடன் கேஜ்ரி வால் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட வாகனங்களில் பயணம் செய்யக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. பொதுமக்களின் வாகனங்களுடன் சேர்ந்து சாலையில் சாதாரணமாகத்தான் அமைச்சர்களும், அதிகாரிகளும் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கிய 18 வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

எனினும், தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்பை பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் இந்த முடிவை அறிந்த பின்பு, டெல்லியின் தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் தங்கள் வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றத் துவங்கி விட்டனர்.

ஏற்கெனவே, கேஜ்ரிவால் தனக்கும் தனது அமைச்சர்களுக்கும் அரசு பங்களா மற்றும் பாதுகாப்பு காவலர்கள் தேவையில்லை எனக் கூறி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x