Last Updated : 31 Dec, 2013 12:42 PM

 

Published : 31 Dec 2013 12:42 PM
Last Updated : 31 Dec 2013 12:42 PM

மன்மோகன் ராஜினாமாவா?- பிரதமர் அலுவலகம் மறுப்பு

பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சில செய்தி சேனல்களில் செவ்வாய்க்கிழமை காலை வெளியான தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வார்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மக்கள் - செய்தி தொடர்புத் துறை அமைச்சரான மணீஷ் திவாரி கூறுகையில், “இது ஒரு ஆதாரமற்ற செய்தி. ஒரு பக்கம் பிரதமர் செய்தியாளர்களிடம் பேசுவதில்லை எனப் புகார் வருகிறது. அதற்கு அவர் இணங்கினால், அதை குறைவான தரத்தில் பார்க்கிறார்கள்” என வருத்தம் தெரிவித்தார்.

சில ஊடகங்கள் வெளியிடும் பொறுப்பற்ற செய்திகளையும், தவறான ஊகங்களையும் கண்டித்த திவாரி, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் சரியாக நேரத் தில் அறிவிக்கப்படுவார் என்றார்.

கடந்த திங்கள்கிழமை நிதி யமைச்சர் ப.சிதம்பரம் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் “வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், பிரதமராகப் போவது யார் என்பதை காங்கிரஸ் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்பது எனது கருத்து” என்றார்.

இதே கருத்தை, காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸும் கூறியிருந்தது. இதற்கு முன் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானபோது செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, “நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் வேட்பாளரை அறிவிக்க இருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து மன்மோகன் சிங் ஒருமுறை, “பிரதமர் பதவிக்கு ராகுல் தகுதியானவர்” எனக் கூறியிருந்தார்.

2004 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் வெற்றி பெற்றது முதல், அவர் பிரதமராக்கப்பட வேண்டும் என காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 17 ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுல் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மன்மோகன்சிங் வரும் 3ம் தேதி காலை 11 மணிக்கு செய்தி யாளர்களை சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது மன்மோகன்சிங்கின் கடைசி பத்திரிகையாளர் சந்திப்பாக இருக்கலாம் எனவும், அதில் அவர் ராஜினாமாவை அறிவிக்கலாம் எனவும் செவ்வாய்க்கிழமை காலை ஊகத் தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டன. இதைத்தான், பிரதமர் அலுவலகம் கடுமையாக மறுத்துள்ளது.

மன்மோகன்சிங் ராஜினாமா புரளி, இதற்கு முன்பும் ஒருமுறை கிளம்பி, அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே காங்கிரஸ் அரசின் கொள்கைகள் குறித்த சர்ச்சை, அரசின் மீதான ஊழல் புகார், 4 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறி்த்த கேள்விகளை பிரதமர் வரும் வெள்ளிக்கிழமை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x