Published : 20 Apr 2017 07:42 AM
Last Updated : 20 Apr 2017 07:42 AM
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 13 பேர் விசாரணையை சந்திக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்த வழக்கை தினந் தோறும் விசாரித்து இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்கும்படி லக்னோ நீதிமன்றத் திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலை வர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரபிரதேச முதல்வர் கல்யாண்சிங் (தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநர்) உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் அன்றைய தினம் மேடையில் இருந்த தலைவர்கள் மீது தனி வழக்கும், லட்சக்கணக் கான கரசேவகர்கள் மீது தனி வழக்கும் என்று இரண்டு வழக்காக பிரிக்கப்பட்டு தலைவர்கள் மீதான வழக்கு உத்தரபிரதேச மாநிலம் ரே பரேலியிலும், கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோவிலும் நடந்து வந்தது. இதில், ரே பரேலி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. அடையாளம் தெரி யாத கரசேவகர்கள் மீது தொடரப் பட்ட வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. சிறப்பு நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு உறுதி செய்தது.
அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு நேற்று அளித்துள்ள தீர்ப்பு விவரம்:
தொழில்நுட்ப காரணங்களைக் கூறி அத்வானி, ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டிருப்பது ஏற்புடையதல்ல. அவர்கள் அனைவரும் விசா ரணையை சந்திக்க வேண்டும். பிரிக்கப்பட்ட இரண்டு வழக்கு களையும் ஒன்றாக இணைத்து லக்னோ நீதிமன்றத்தில் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும். அவர்கள் மீதான கூட்டுசதி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியது ஆகிய குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்துவது அவசியம். இந்த வழக்கை தினந்தோறும் நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும்வரை விசாரணை நீதிமன்ற நீதிபதியை மாற்றக் கூடாது. சாட்சிகளை முதலில் இருந்து மீண்டும் அழைத்து வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளவர்களை மீண்டும் பரிசீலனை செய்தால் போதும்.
கல்யாண்சிங்கிற்கு விதிவிலக்கு
ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண்சிங்கிற்கு, ஆளுநருக்கு உரிய சட்டப் பாதுகாப்பு இருப்ப தால் அவர் மீது எந்த நீதிமன்றமும் விசாரணை நடத்த முடியாது (ஆளுநர் கல்யாண் சிங் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தார்). ஆனால், அவர் ஆளுநர் பதவியிலி ருந்து எப்போது விலகுகிறாரே அன்று முதல் பாபர் மசூதி இடிப்பு வழக்கை சந்திக்க வேண்டும்.
4 வாரங்களுக்குள் விசாரணை
இந்த வழக்கில் தினந்தோறும் சாட்சிகள் ஆஜராகி சாட்சியம் அளிக்கும் வகையில், சிபிஐ தரப்பில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வழக்கில் எக்காரணம் கொண்டும் வாய்தா வாங்க கூடாது. நியாயமான கால அவகாசம் கோரினால் மட்டும் வாய்தா வழங்குவது குறித்து விசாரணை நீதிபதி முடிவெடுக்க லாம். இதில், யார் இழுத்தடித்தாலும் எதிர் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகி நியாயம் கோரலாம். இன்றைய தினத்தில் இருந்து 4 வாரங்களுக்குள் விசாரணையை தொடங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை
1992 டிசம்பர் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கு கரசேவகர்கள் மீதும் மற்றொரு வழக்கு அத்வானி, எம்.எம். ஜோஷி உள்ளிட்ட விஐபிக்கள் மீதும் தொடரப்பட்டது.
2001 மே 4 அத்வானி, ஜோஷி, உமா பாரதி, பால் தாக்கரே உள்ளிட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
2004 நவ. 2 சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
2010 மே 20 சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2011 பிப்ரவரி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
2017 மார்ச் 6 பாஜக மூத்த தலைவர் மீதான சதி குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
2017 மார்ச் 21 அயோத்தி ராமர் கோயில் பிரச்சினைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணலாம் என்று உச்ச நீதிமன்றம் யோசனை கூறியது.
2017 ஏப். 19 அத்வானி, ஜோஷி, உமா பாரதி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT