Published : 08 Dec 2013 07:00 PM
Last Updated : 08 Dec 2013 07:00 PM
டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன.
தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக ஆம் ஆத்மிகள் (சாமான்ய மனிதர்கள்) கெஜ்ரிவால் கட்சியின் வியப்பூட்டு வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஆம் ஆத்மி கட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தியது.
கட்சியின் அதிகாரபூரவ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறும்பதிவு சேவையான ட்விட்டரையும் கட்சி தீவிரமாக பயன்படுத்தியது.
குறிப்பாக வாக்குப்பதிவு நெருங்கிய நிலையில் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் ட்விட்டரை திறம்பட பயன்படுத்தினர். இதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க கோரும் #Vote4AamAadmiParty, #AAPSweepingDelhi போன்ற ஹாஷ்டேகுகள் ட்விட்டரில் முன்னிலை பெற்றன. வாக்குப்பதிவு தினத்தன்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க கோரும் குறும்பதிவுகள் வெளியாயின.
சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் சாதிக்குமா என எழுப்பட்ட சந்தேகங்களை பொய்யாக்கி, அக்கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது பிராதன கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களர்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக ஆதரவின் முக்கியத்துவம் குறித்து அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே பிரபலங்களும் சாமானியர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் முதல்வரான உமர் அப்துல்லா, அசாதாரணமான தேர்தல் துவக்கத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் என குறும்பதிவு வெளியிட்ள்ளார். இப்போது உங்கள் நல்ல போராட்டத்தை தொடந்து தில்லி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னணி தொழிலதிபரும் மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, "ஆம் ஆத்மி கட்சியின் மகத்தான துவக்கம் நாம் எந்த அளவுக்கு மாற்றத்திற்காக துடித்திக் கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுகிறது" என கூறியுள்ளார்.
தொழிலதிபரும் ப்யோகான் நிறுவனருமான கிரண் மஜும்தார் ஷா, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மக்களின் கோபம் நன்றாக வெளிப்பட்டுள்ளது, இலவசங்கள் மூலம் மக்களை வாங்கிவிட முடியாது என ஆம் ஆத்மி கட்சி உணர்த்தியிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனர் சேகர் கபூர், ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள், உங்கள் வெற்றி 2014 தேர்தலிலும் புதிய புரட்சி ரத்தத்தை பாய்ச்சும் என்றும் நம்புவோம் என்று கூறியுள்ளார்.
நடிகை அனுஷ்கா ஷர்மா, கட்சியின் பெயரிலேயே புதுமை இருக்கிறது. தொலைநோக்கு இருந்தால் தான் புதுமை வரும் என்று கூறியுள்ளார்.
இதைத்தவிர சாமானியர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களில் கட்சியின் இளம் தலைவர்களை பார்க்க முடிவதை அவர்கள் குறிப்பிட்டு பாராட்டியுள்ளனர். ஆதரவாளர்களை முன்னிலைபடுத்துவது மற்றும் நாம் என்றே பேசுவதையும் பலரும் பாராட்டியுள்ளனர். புதிய யுகம் பிறந்திருப்பதாகவும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்த குறும்பதிவுகளை எல்லாம் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூரவ ட்விட்டர் கணக்கில் ரீடிவீட் செய்யப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
இந்த ட்விட்டர் பக்கத்தில் கட்சியின் நிறுவனர் கெஜ்ரிவாலின் செய்தியாளர் சந்திப்பும் குறும்பதிவுகளாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டர் முகவரி: >https://twitter.com/AamAadmiParty
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT