Published : 19 Dec 2013 05:13 PM
Last Updated : 19 Dec 2013 05:13 PM
இந்திய துணைத் தூதர் தேவயானி கோபர்கடே மீது அமெரிக்கா எடுத்த நடவடிக்கையையும், அவரை நடத்திய விதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசிகையில், "வெளியுறவு துறையில், அனைத்தும் பரஸ்பர நட்புடன் நடைபெறுகிறது. அத்தகைய நட்பான அணுகுமுறை அமெரிக்காவிடம் இல்லையேனில், இந்தியாவும் பின்பற்றுவது கடினம். நட்பு நாடுகளை எப்படி அணுகு வேண்டும் என்று இந்தியாவை பார்த்து அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும்", என்று கூறினார்.
இந்த வழக்கில் அமெரிக்கா முறையான விசாரணையை கையாண்டது என்பதையும் அவர் மறுத்துள்ளார். "அவர்கள் தங்களுடைய சொந்த விதிமுறைகளைப் பின்பற்றியிருக்கிறார்கள். அது நம் நாட்டிற்கு ஏற்புடையதல்ல" என்று தெரிவித்தார்.
தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அமெரிக்க போலீஸார் டிச. 12- ஆம் தேதி பொது இடத்தில் கைது செய்தனர். பின்னர், அவரை ஜாமீனில் விடுவித்தனர். அவர் மீதான மோசடி வழக்கை கைவிடுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா மன்னிப்பு கேட்ட வேண்டும்: கமல் நாத்
தேவயானி கோப்ரகடே கைது சம்பவம் தொடர்பாக இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "அமெரிக்கா வெறும் சம்பிரதாயத்திற்கு மன்னிப்பு கோரினால் போதாது. அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, தெளிவான முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும்." என்றார்.
அனைத்து நாடுகளும் இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் நடவடிக்கை வருந்தத்தக்கது என்று பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT