Published : 11 Oct 2013 12:07 PM
Last Updated : 11 Oct 2013 12:07 PM

பைலின் அதி தீவிரப் புயல் - ஆந்திரம், ஒடிசாவில் உஷார் நிலை

ஒடிசாவின் கோபால்புரத்தில் கரையைக் கடக்கவுள்ள பைலின் புயல், அதி தீவிரப் புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

விசாகப்பட்டினத்திலிருந்து 500 கி.மீ தூரத்தில் இன்று காலை மையம் கொண்டிருந்த பைலின் புயல், நாளை (சனிக்கிழமை) மாலை அல்லது இரவு ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினத்துக்கும் ஒடிசாவின் பரதீபுக்கும் இடையே கோபால்புரத்தில் கரையை கடக்கிறது.

பைலின் புயல் அதி தீவிர புயலாக மாறி, மணிக்கு 220கி.மீ வேகத்தில் தாக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.ரமணன் கூறினார்.

இதுபோன்ற அதி தீவிர புயல், ஒடிசா மாநிலத்தை 1999-ல் தாக்கியது. இப்போது பைலின் புயல் தீவிரமானால், 14 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசாவைத் தாக்கும் அதி தீவிர புயல இதுவாக தான் இருக்கும்.

இந்தப் புயல் மணிக்கு 200 கி.மீ விட அதிக வேகத்தில் தாக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் ஆந்திரா, ஒடிசா விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இது அதி தீவிர புயல் என்பதால் விவசாயிகள் மீனவர்கள் மட்டுமல்லாது, அனைவருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

உஷார் நடவடிக்கை...

பைலின் புயலின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஆந்திரம் மற்றும் ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இரு மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளன.

ஒடிசா மற்றும் ஆந்திராவுக்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவப் படையை தயார் நிலையில் வைத்துக்கொள்ள, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.

இரு மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

ஒடிசாவில் 28 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினரும், ஆந்திராவில் 15 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ரயில்வே அறிவிப்பு...

புயலின் தாக்கம் காரணமாக, சனிக்கிழமை 24 ரயில்களின் நேரம் மாற்றப்படும் அல்லது சேவை ரத்து செய்யப்படும் என்று கிழக்கு கடலோர ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால், விசாகப்பட்டினம் - பட்ராக், ஹவுரா - சென்னை பிரதான பாதையில் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது.

'பைலின்' பற்றி...

'பைலின்' (Phailin) என்பது தாய்லாந்து நாட்டு வார்த்தை. இதை 'பைலின்' அல்லது 'பிலின்' என்று கூறலாம். இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, மாலத்தீவு, ஓமன் ஆகிய எட்டு தெற்காசிய நாடுகள் வெப்ப மண்டல புயல் கூண்டு என்று அழைக்கப்படுகின்றன.

இதில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எட்டு பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 64 பெயர்களைக் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டினர் அளித்த பெயரும் புயலுக்கு சூட்டப்பட்டு வருகிறது. இந்த முறை தாய்லாந்து நாட்டினர் அளித்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x