Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM
சமூக இயக்கங்களிலும் அரசியல் இயக்கங்களிலும் சமரசங்கள் தவிர்க்க முடியாதவை. கடைபிடிக்கப்படும் வழிமுறைகளில் மட்டுமல்ல சில சமயங்களில் லட்சியங்களிலேயே சமரசங்கள் செய்ய வேண்டிவரும்.
எந்தச் சூழலில், எதன் பொருட்டு சமரசங்கள் செய்யப்படுகின்றன என்பதைப் பொருத்துதான் அந்த சமரசம் அவசியமானதா அல்லது அயோக்கியத்தனமானதா என்பது கணிக்கப்படும். எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் ஒட்டோ உறவோ கிடையாது என்று உறுதியாக அறிவித்திருந்த ஆம் ஆத்மி கட்சி, வெளியிலிருந்து காங்கிரஸ் அளிக்கும் ஆதரவுடன் ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவோம் என்று எதிர்பார்த்திருக்க முடியாது.
தான் தீவிரமாக எதிர்த்துவந்த கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதா அல்லது மறுதேர்தலுக்கு வழிவகுப்பதா என்பதை டெல்லி வாக்காளர்களின் முடிவுக்கே ஆ.ஆ.க. விட்டுவிட்டது. பெரும்பாலான வாக்காளர்கள் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த நிலையில் அதை ஏற்றுக்கொண்ட ஆ.ஆ.க.வின் நிலையை அக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான யோகேந்திர யாதவ் இப்படி தெளிவுபடுத்தியிருந்தார்:
‘‘காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் உறவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால் அவற்றுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த அரசுக்கு சட்டசபையில் இருப்பது 28 இடங்கள்தான். இது போதுமானதில்லை என்று இந்த சட்டசபை கருதும்பட்சத்தில் எங்களது அரசு முடிவுக்கு வரும். எங்களது கொள்கைகள் எதிர்க்கப்படாதவரை இந்த அரசு ஒரு நாளோ அல்லது ஐந்து ஆண்டுகளோ நீடிக்கலாம்.’’
டெல்லியில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றி கடந்த காலத்தில் நடந்த ஊழல்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்படி எடுக்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக்கொள்ளும் என்பதால் இந்த அரசு வெகுநாள்கள் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் ஆ.ஆ.க.வின் தலைவர்களுள் ஒருவருமான பிரசாந்த் பூஷண் தெளிவாக கூறியிருக்கிறார். ஆக, ஆ.ஆ.க. அரசின் ஆயுள் அதிகமில்லை என்பது தெளிவு.
ஆ.ஆ.க.வுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவெடுத்ததற்கான முக்கியமான காரணங்களுள் ஒன்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்களில் சிலர் பிரிந்துசெல்வதன் மூலம் பிளவு ஏற்பட்டு அதனால் பாஜக ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான்.
1979-ல் மொராஜி தேசாயின் ஆட்சியை கவிழ்க்க இந்திரா காந்தி, சரண் சிங்கிற்கு ஆதரவளித்ததையும், 1990-ல் வி.பி.சிங்கின் ஆட்சியை கவிழ்க்க சந்திரசேகருக்கு ராஜீவ் காந்தி ஆதரவளித்ததையும் நினைவுகூர்கிறபோது காங்கிரஸ் கட்சி எப்போதும் எந்தக் கட்சிக்கும் கொள்கை அடிப்படையிலான ஆதரவை வழங்கியதில்லை என்பது தெளிவு.
காங்கிரஸுடன் எங்களுக்கு எந்த உடன்படிக்கையோ பேச்சுவார்த்தையோ இல்லை. எங்கள் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே எங்கள் ஆட்சி நடக்கும். ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஊழல் புரிந்தவர்கள் மீது ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆ.ஆ.க. தெளிவாக அறிவித்திருப்பது ஷீலா தீட்சித் உட்பட பல டெல்லி காங்கிரஸ் தலைவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. ஆகவே, ஓரிரு மாதங்கள் கழித்து, அதாவது ஜன் லோக்பால் மசோதா சட்டமான பிறகு ஆதரவை விலக்கிக்கொள்வதைவிட இப்போதே ஆதரவை விலக்கிக்கொள்வது நல்லது என டெல்லி காங்கிரஸ்காரர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். வரும் மக்களவைத் தேர்தல் வரைக்கும் ஆ.ஆ.க. ஆட்சி நீடிப்பது ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதில்தான் பெரிதும் சார்ந்து இருக்கிறது.
வழக்கமாக கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகளுடன் உருவாகும் ‘புரிதல்கள்’ ஆ.ஆ.க.வுடன் சாத்தியமில்லை என்பது காங்கிரஸுக்கு புரிந்திருக்கிறது. ஆ.ஆ.க. விதித்த 18 நிபந்தனைகளில் (ஆ.ஆ.க.வின் தேர்தல் வாக்குறுதிகள்) 16ஐ நிறைவேற்ற நிர்வாக ரீதியான முடிவுகளே போதுமானது என்று முதலில் கூறிய காங்கிரஸ் இப்போது மின் கட்டணத்தைக் குறைப்பது, 500 புதிய பள்ளிகளை கட்டுவது, கிராம சபைகள் அமைப்பது போன்ற நிபந்தனைகள் நிறைவேற்றப்பட முடியாதவை என நிராகரித்திருக்கிறது.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஆ.ஆ.க. நிறைவேற்ற வேண்டும், அவற்றை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என பார்க்கிறோம் என்று கூறிய காங்கிரஸ் இப்போது இவை சாத்தியமற்றவை என்று எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பது காங்கிரஸின் அச்சத்தைக் காட்டுகிறது. குறிப்பாக மின் கட்டண விவகாரத்தில் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை தாங்கள் புலனாய்வு செய்யப்போவதாக ஆ.ஆ.க. கூறியிருப்பது காங்கிரஸுக்கு பெருத்த கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக, ஆ.ஆ.க.விற்கு ஆதரவளிப்பதாக சொன்னதே தவறோ என்று இப்போது காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பதில் ஆச்சர்யமில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஆ.ஆ.க. தான் அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றும் பட்சத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு அது பேரிடியாக முடியும் என்றும் காங்கிரஸ் நினைப்பதில் ஆச்சர்யமில்லை. 700 லிட்டர் இலவச தண்ணீருக்கு பதிலாக 500 லிட்டர் தர முடிந்தாலே, மின் கட்டணத்தை பாதியாக இல்லாவிட்டாலும் 25% குறைக்க முடிந்தாலே போதும். ஆ.ஆ.க.வின் எதிர்கால வெற்றி உறுதி செய்யப்படும். இந்த இரண்டுமே சாத்தியமானது என்பதை காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுமே உணர்ந்திருக்கின்றன. ஆகவே இரண்டு தேசிய கட்சிகளுமே ஆ.ஆ.க. மீது அரசியல் தாக்குதல்களை தொடங்கியிருக்கின்றன.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் ஆ.ஆ.க.வுக்கான தனது ஆதரவை காங்கிரஸ் விலக்கிக்கொள்ளுமெனில் அதுவும் காங்கிரஸை வரும் மக்களவைத் தேர்தலில் பெரிதும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் ஆ.ஆ.க. ஆட்சி உடனடியாக கவிழ்வது என்பது அதன் மீது மக்கள் அனுதாபம் கொள்ள வழிவகுக்கும் என்பதை இரண்டு தேசிய கட்சிகளுமே உணர்ந்திருக்கின்றன. ஆக மக்களவைத் தேர்தல் வரை ஆ.ஆ.க. ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.
ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது தங்களது முதல் பணி என்று ஆ.ஆ.க. கூறியுள்ள நிலையில், சமீபத்தில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய மிக பலவீனமான லோக்பால் மசோதாவுக்கு உற்சாகமாக வாக்களித்த இரண்டு தேசிய கட்சிகளும் ஜன் லோக்பால் விஷயத்தில் என்ன செய்யப்போகின்றன என்பது அடுத்த ஒரு மாதத்திற்குள் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT