Published : 24 Mar 2017 08:50 PM
Last Updated : 24 Mar 2017 08:50 PM
அன்னியச் செலாவணி மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கவுரி கான், இவரது கணவரான நடிகர் ஷாரூக்கான், நடிகை ஜூஹி சாவ்லா ஆகியோருக்கு அமலாக்கத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரூ.73.6 கோடி அன்னியச் செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
விவகாரம் என்ன?
ரெட் சில்லீஸ் தனியார் நிறுவனம் என்பது ரெட் சில்லீஸ் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் (பெர்முடா) சொந்தமான கிளை நிறுவனமாகும். இந்நிறுவனம் ஷாருக்கானுக்கும், அவரது மனைவிக்கும் சொந்தமானது.
“2008-ல் ரெட் சில்லீஸ் நிறுவனம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்குவதற்காக நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் என்பதை உருவாக்கியது. தொடக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அத்தனை பங்குகளும் ரெட் சில்லீஸிடமும் ஷாரூக்கானிடமும் இருந்தன” என்கிறது அமலாக்கத்துறை.
ஐபிஎல் தொடர் வெற்றிக்குப் பிறகு நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2 கோடி புதிய பங்குகளை வெளியிட்டது. இதில் 50 லட்சம் பங்குகள் மொரீஷியஸில் உள்ள சீ ஐலண்ட் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திற்கும், 40 லட்சம் பங்குகள் ஜூஹி சாவ்லாவுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பங்குகள் அதன் முகப்பு மதிப்பாகிய ரூ.10க்கு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் அதிகம். சாவ்லா உடனடியாக சீ ஐலண்ட் நிறுவனத்திற்கு இதே ரூ.10-க்கு தன் 40 லட்சம் பங்குகளை விற்றுள்ளார்.
“எனவே அயல்நாட்டு நிறுவனமான சீ ஐலன்ட் நிறுவனத்திற்கு 90 லட்சம் பங்குகள் ரூ.10 என்ற விலைக்கே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சமயத்தில் பங்கின் விலை ரூ.86-99 என்று இருந்தது. இதனால் அன்னியச் செலாவணி ரூ.73.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று அமலாக்கத்துறை கூறி 15 நாட்களுக்குள் இதற்கான உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT