Published : 30 Aug 2016 04:36 PM
Last Updated : 30 Aug 2016 04:36 PM
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் மருத்துவ உதவி மறுக்கப்பட்ட அலட்சியத்தினால் 12 வயது சிறுவன் தந்தையின் தோள்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
மருத்துவமனைகளின் அலட்சியம், மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை விவகாரம் சிலகாலமாக செய்திகளில் அடிபட்டு வந்தன. இந்நிலையில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் மருத்துவமனைகளின் அலட்சியப் போக்கிற்கு இன்னொரு வெளிப்படையான சாட்சியமாக விளங்குகிறது.
கான்பூர் ஃபஸால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆன்ஷ் என்ற 12 வயது சிறுவன் மேலதிக காய்ச்சல் காரணமாக லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் திங்களன்று சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுவனை அனுமதிக்க மறுத்துள்ளது லாலா லஜ்பத் ராய் மருத்துவமனை நிர்வாகம். அனுமதி மறுத்ததோடு, அருகில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கைவிரித்துள்ளது.
மேலும் குழந்தைகள் மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்ல இந்த மருத்துவமனை எந்த ஒரு வாகன வசதியும் செய்து தரவில்லை. இதனையடுத்து தந்தை சுனில் குமார், தனது மகனை தோள்களில் சுமந்தபடியே ஹாலெட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
ஆனால் ஹாலெட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் ஆன்ஷ் உயிர்பிரிந்தது.
இந்தச் சம்பவம் குறித்து தந்தை சுனில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறும்போது, “எனது மகனுக்கு பயங்கர காய்ச்சல். ஆன்ஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தான், படிப்பில் கெட்டிக்காரன். பயங்கர காய்ச்சலில் வீழ்ந்தான். நான் மருத்துவர்களிடம் அவசர சிகிச்சை தேவை என்று மன்றாடினேன். அவர்கள் 30 நிமிடங்கள் என்னை காக்க வைத்து ஒன்றுமே கூறாமல் அதன் பிறகு குழந்தைகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல கூறினர். ஆனால் அங்கு மருத்துவமனையில் என் மகன் இறந்து விட்டான் என்று கூறினர்” என்றார் கண்ணீரை அடக்க முடியாமல்.
ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை பல கிலோ மீட்டர்கள் தூரம் கணவன் தூக்கிச் சென்ற அவல, துயரச் சம்பவத்திற்குப் பிறகு தற்போது சிகிச்சை மறுக்கப்பட்ட சிறுவன் தந்தையின் தோளிலேயே உயிரை விட்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT