Published : 22 Mar 2014 01:32 PM
Last Updated : 22 Mar 2014 01:32 PM

பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் தலைவர் சத்பால்: உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு கவிழும் ஆபத்து

உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் சத்பால் மஹாராஜ் என்ற சத்பால் சிங் ராவத், பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார். இதனால், அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரகண்டின் ஆன்மிக தலைவராகவும் கருதப்படும் சத்பால் (62), கடந்த இருபது ஆண்டுகளாக அம்மாநில காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர்.

அவர் நேற்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடந்த ஆண்டு உத்தரகண்டில் ஏற்பட்ட இயற்கை சீரழிவால் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. பிரதமராக தேர்வு செய்யப்பட இருக்கும் நரேந்திர மோடி நாட்டை சீனாவை விட அதிகமாக முன்னேற்றுவார்’ என்றார்.

காங்கிரஸ் தலைமை தன்னை விட்டுவிட்டு ஹரீஸ் ராவத்தை உத்தரகண்ட் மாநில முதல்வராக்கியதால் தலைமை மீது சத்பால் கடும் கோபத்தில் இருந்தார். இதனால், மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார். இவரது மனைவியான அம்ருத்தா ராவத், மாநில அமைச்சராக இருக்கிறார். உத்தரகண்ட்டில் உள்ள 34 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 10 பேர் சத்பாலின் ஆதரவாளர்கள்.

எனவே, மக்களவை தேர்தலுக்கு பின் உத்தரகண்டில் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து வரலாம் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு 1991-ம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து விலகிய சத்பால் நான்கு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x