Published : 20 Jan 2014 10:18 AM
Last Updated : 20 Jan 2014 10:18 AM

மத்திய அரசை எதிர்த்து தடையை மீறி கேஜ்ரிவால் தர்ணா

மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர்த்து அந்த அமைச்சகம் முன்பு திங்கள்கிழமை தர்ணாவில் ஈடுபட சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அவர், தான் தடுத்து நிறுத்தப்பட்ட ரயில் பவன் (ரயில்வே தலைமை அலுவலகம்) முன்பே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

உயர் பாதுகாப்பு வளையமான ‘நார்த் பிளாக்கில்’ போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று போலீஸார் கூறியும் தடையை மீறி அங்கேயே 10 நாள்கள் தர்ணாவில் ஈடுபடப் போவதாக கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

போலீஸாரை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தல்:

டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, தனது தொகுதியான மாள்வியா நகரில் உகாண்டாவைச் சேர்ந்த சிலர் தங்கியிருக்கும் வீட்டில் திடீரென ஆய்வு நடத்தினார். அங்கு போதைப் பொருள் கடத்தலும் பாலியல் தொழிலும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அங்கிருந்த வர்களை கைது செய்யுமாறு டெல்லி போலீஸாருக்கு சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி உத்தரவிட்டார். ஆனால், கைது வாரன்ட் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது என்று போலீஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதனால்தான் டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

போதை கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் போலீஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும், டெல்லி அரசின் கீழ் போலீஸ் துறையைக் கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கேஜ்ரிவாலும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஆம் ஆத்மி தொண்டர்களும் தர்ணாவை தொடங்கியுள்ளனர்.

கேஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்:

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் ‘நார்க் பிளாக்கில்’ அமைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன்பு தர்ணா நடத்த கேஜ்ரிவால் தலைமையில் அமைச்சர்களும் ஆத் ஆத்மி தொண்டர்களும் புறப்பட்டனர். அவர்களை ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கேஜ்ரிவால் அங்கேயே தர்ணாவை தொடங்கிவிட்டார்.

தர்ணாவிலும் அலுவலகப் பணி:

தர்ணா வளாகத்திலேயே தனது அலுவலகப் பணிகளையும் கேஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் பேசியபோது, நான் தர்ணாவில் ஈடுபட்டிருப்பதால் அரசு அலுவல் பணிகள் பாதிக்கப்படாது. இங்கிருந்தே அனைத்து கோப்புகளையும் சரிபார்த்து கையெழுத்திடுவேன் என்றார்.

சுஷீல் குமார் ஷிண்டே மறுப்பு:

மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே கூறிய போது, டெல்லி போலீஸ் துறை ஒருபோதும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படாது என்றார்.

எம்.எல்.ஏ. மீது போலீஸ் தாக்குதல்

தர்ணா வளாகத்தில் அதிவிரைவு படை உள்பட சுமார் 3000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறிச் செல்ல முயன்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அகிலேஷ் திரிபாதி உள்ளிட்டோர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தர்ணா வளாகத்தில் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா. படம்: சங்கர் சக்கரவர்த்தி (அடுத்த படம்) உள்துறை அமைச்சகத்துக்கு செல்ல முயன்ற ஆம் ஆத்மி தொண்டர்களை தடுத்து நிறுத்திய போலீஸார். படம்: சந்தீப் சக்சேனா

குடியரசு தின விழாவுக்கு பாதிப்பு:

ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும். தற்போது அந்த பாதை சீல் வைக்கப்பட்டு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியினர் 10 நாள் தர்ணா அறிவித்திருப்பதால் குடியரசு தின விழாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கேஜ்ரிவால் கூறியபோது, எங்களது போராட்டத்தால் குடியரசு தின விழாவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நாங்கள் காரணம் அல்ல. மத்திய அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x