Published : 01 Nov 2014 06:17 PM
Last Updated : 01 Nov 2014 06:17 PM
அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட சீன எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளை செய்ய உரிமை உண்டு என்றும் அதனை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
இந்தியா– சீனா இடையே நீண்ட காலமாக அருணாச்சல பிரதேசத்தை மையம் கொண்டு பிரச்சினை நிலவி வருகிறது. பல முறை சீன வரைபடத்துடன் அருணாச்சல பிரதேசத்தை இணைத்து வரைபடம் வெளியிட்டும், எல்லையில் அத்துமீறியும் சீன ராணுவம் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே அங்கு சர்வதேச எல்லைப் பகுதியான மகோ-திங்பூவில் சாலை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டிருந்தார்.
ஆனால் சீன தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "இந்தியாவுக்கு சீனாவுக்கும் கிழக்கு எல்லைப் பகுதியால் பிரச்சினை நீடித்துவருகிறது. ஆகையால் இதற்கு தீர்வு காணும் முன்பு, அருணாச்சலத்தில் எந்த பணிகளையும் இந்தியா மேற்கொள்ளக் கூடாது" என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கு பதில் கூறும் விதமாக மத்திய இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ, "நமது மாநிலத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நமக்கு உரிமை உள்ளது என்றும் அதை யாரும் தடுக்க முடியாது.
கடந்த 60 ஆண்டுகளாக செய்யாத சில வளர்ச்சி பணிகளை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. எனது அறிக்கையால் சீனாவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. நான் மக்களின் பிரதிநிதியாக பணியை செய்வதை அவர்களால் தடுக்க முடியாது.
சீன எல்லைப்பகுதியில் கட்டமைப்பு மேற்கொள்வதாக கூறவில்லை. அருணாச்சல பிரதேசத்தின் மூலம் தேர்வான அமைச்சராக நான் எனது பதவியில் உள்ளேன். அதன்படி நமது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணிகளை மேற்கொள்ள எனக்கு கடமையும் உரிமையும் உள்ளது. அதனை நான் நிறைவேற்றுவேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT