Published : 07 Aug 2016 07:43 AM
Last Updated : 07 Aug 2016 07:43 AM

கிருஷ்ணா புஷ்கரம் விழாவையொட்டி விஜயவாடாவில் திருப்பதி மாதிரி கோயில்

ஆந்திரா, தெலங்கானாவில் கோதாவரி புஷ்கரத்தை தொடர்ந்து வரும் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை கிருஷ்ணா புஷ்கரம் எனப்படும் புனித நீராடும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக் கான இறுதிக்கட்ட பணிகளில் இரு மாநில அரசுகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் பாபு நேற்று கூறியதாவது: கிருஷ்ணாபுஷ்கரம் விழாவுக்காக ஆந்திராவுக்கு மட்டும் பல மாநிலங்களைச் சேர்ந்த 3 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 4,000 சிறப்பு பஸ்களை இயக்க ஆந்திர அரசும் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தென் மத்திய ரயில்வேயும் திட்டமிட்டுள்ளன.

கிருஷ்ணா நதிக்கரையின் பல இடங்களில் பக்தர்கள் நீராடுவதற்காக நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பவித்ர சங்ராமம் எனப்படும் இடத்தில் மட்டும் ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடலாம்.

தினமும் 7.5 லட்சம் பக்தர்களுக்கு இலவசமாக மோர், குடிநீர், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இவ்விழாவையொட்டி, திரு மலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில், விஜயவாடா பொதுப் பணித்துறை மைதானத்தில் எழுமலையானின் மாதிரி கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் ஆகம விதிகளின்படி இன்று காலை 7.30 மணிக்கு திறக்கபட உள்ளது. திருமலையில் ஏழுமலையானுக்கு நடைபெறும் சுப்ரபாத சேவை உட்பட அனைத்து சேவைகளும் இங்கு நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x