Last Updated : 02 Jan, 2014 08:25 AM

 

Published : 02 Jan 2014 08:25 AM
Last Updated : 02 Jan 2014 08:25 AM

டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

டெல்லி சட்டசபையின் முதல்கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது இன்று (வியாழக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

புதன்கிழமை சட்டசபை கூடியதும், தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சௌத்திரி மத்தீன் அகமதுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிராமணம் செய்து வைத்தார்.

பின்னர், முதலாவதாக கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு அகமது பதவி பிராமணம் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர் உள்பட அனைவருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியின் டாக்டர்.ஹர்ஷவர்தனும் கேஜ்ரிவாலும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பறிமாறிக் கொண்டனர். இதையடுத்து டெல்லி சட்டசபை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய டெல்லி சட்டசபை கூட்டத்துக்கு அரவிந்த் கேஜ்ரிவால், தமக்கு சொந்தமான நீலநிற காரிலேயே வந்தார். அவருடன், கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவும் வந்தார். அவர்களது ஆம் ஆத்மி கட்சியின் மற்ற 26 உறுப்பினர்கள் அரசுப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் சட்டசபைக்கு வந்திருந்தனர்.

ஜனவரி 7 வரை சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் பெரும்பான்மைக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஆம் ஆத்மிக்கு 8 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளது.

3-ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். சபாநாயகர் தேர்தலில் ஆம் ஆத்மியின் மணீந்தர் சிங் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு ஆம் ஆத்மி அரசு தோற்றால், அன்றைய தினத்துடன் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கப்படும். இல்லை எனில், டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், ஜனவரி 6-ம் தேதி சட்டசபையில் உரையாற்றுவார்.

உடல்நிலை பாதிப்பு

கேஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை. இதையடுத்து, அவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு பாட்டில் குளூகோஸ் ஏற்றிய மருத்துவர்கள், இரண்டு நாட்களுக்காவது ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினர். ஆனால், வேறு வழியின்றி பதவி பிரமாணம் செய்து கொள்வதற்காக கேஜ்ரிவால் சட்டசபைக்கு வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x