Published : 04 Aug 2014 01:06 PM
Last Updated : 04 Aug 2014 01:06 PM

ஜெயலலிதாவுக்கு எதிரான கட்டுரை: நாடாளுமன்றத்தில் அதிமுக கடும் அமளி

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வெளியான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் மிகவும் அநாகரிமாக விமர்சித்து வெள்ளிக்கிழமை ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

'நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்களில் அர்த்தம் உள்ளதா?' என்று அந்தக் கட்டுரைக்கு விஷமத்தனமான தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஷெனாலி டி. வடுகே என்பவர் எழுதியிருந்த அந்தக் கட்டுரைக்கு, தமிழக அரசியல் கட்சிகள் கட்சி வேறுபாடின்றி கடும் கண்டனம் தெரிவித்தன.

அதன் தொடர்ச்சியாக, இலங்கை அரசின் இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் கட்டுரை வெளியானதற்காக அந்த நாட்டு அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோரியது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடமும் முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், மாநிலங்களவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை முன்வைத்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை மீண்டும் கூடியபோது, அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையின் நடுவே வந்து, இலங்கை பாதுகாப்புத் துறை வலைதளத்தில் வெளியான கட்டுரையின் நகலை காண்பித்து கூச்சலில் ஈடுப்பட்டனர்.

"கேள்வி நேரத்தை இதுபோல வீணடிப்பது சரியல்ல. நீங்களும், உங்களுடைய சகாக்களும் உங்கள் இடத்திற்கு செல்லுங்கள்" என்று அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி வலியுறுத்தினார். இதனை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டதால், மீண்டும் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதே பிரச்சினை மக்களவையிலும் எழுப்பப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தினார். தொடர்ந்து இலங்கை அதிபருக்கு எதிராக அதிமுகவினர் குரல் எழுப்பினர். இதனால் மக்களவையின் நடவடிக்கையும் சில நிமிடங்கள் பாதித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x