Published : 07 Jul 2016 09:33 AM
Last Updated : 07 Jul 2016 09:33 AM

அறுவை சிகிச்சையால் 13 பேரின் பார்வை பறிபோனது: தெலங்கானா அரசு விசாரணைக்கு உத்தரவு

ஹைதராபாத்தின் மஹதிபட்டினம் பகுதியில் உள்ள சரோஜினி அரசு கண் மருத்துவமனையில் கடந்த வாரம் 13 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் பார்வை பறிபோனது இப்போது தெரியவந்துள்ளது. இதை யடுத்து, அவர்களது உறவினர்கள் நேற்று மருத்துவமனை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு தங்களது கண்களில் குளிர்ச்சியான ஒரு திரவம் விடப்பட்டதாகவும், அதனால் தான் தங்களின் பார்வை பறிபோனதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த மருத்துவமனையின் இணை கண்காணிப்பாளர் டாக்டர். ராஜேந்தர் குப்தா கூறும்போது, “கண் அறுவை சிகிச்சைக்கு முன்பு கண்ணில் விடப்பட்ட திரவத்தில் சில கிருமிகள் இருந்துள்ளன. இதனால் தான் கண்களில் பார்வை கோளாறு ஏற்பட்டுள்ளது. இவற்றை அரசுதான் எங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் கவனக் குறைவோ அல்லது அலட்சியமோ இல்லை” எனக் கூறினார்.

இதனிடையே, தெலங்கானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் லட்சுமி ரெட்டி கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x