Published : 30 Aug 2016 02:57 PM
Last Updated : 30 Aug 2016 02:57 PM
ஆர்எஸ்எஸ் அமைப்பில் காக்கி டிரவுசர் ஓர் அங்கமாக கடந்த 91 ஆண்டுகள் இருந்தது. அவ்வப்போது சீருடையில் மாற்றம் இருப்பினும் காக்கி டிரவுசர் மட்டும் தொடர்ந்தது.
சமீபத்தில் கால மாற்றத்துக்கு ஏற்ப தாங்களும் மாறுவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்து. அதன்படி மாற்றம் செய்யப்பட்ட சீருடை தற்போது விற்பனைக்கும் வந்துள்ளது.
நேற்று நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில், பாரம்பரிய புதிய சீருடை விற்பனைக்கு வந்தது. தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு ஏற்ற புதிய சீருடைகளைப் பெற்றுச் செல்கின்றனர்.
வரும் விஜயதசமி முதல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் வழக்கமான காக்கி டிரவுசருக்கு பதிலாக, பிரவுன் பேன்ட் அணியவுள்ளனர்.
இது குறித்து ஆர்எஸ்எஸ் உறுப்பினரும், சிந்தனையாளருமான திலீப் தியோதர் கூறும்போது, "இந்தச் சீருடையில் இருந்து யாருக்கும் விலக்கில்லை. ஆர்எஸ்எஸ் தலைவரும்கூட இச்சீருடையை அணிய வேண்டும்" என்றார்.
பேண்ட் விலை ரூ.250:
மாற்றியமைக்கப்பட்ட சீருடைக்கான பேண்ட் விலை ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேவைப்படுவோர் மேல்சட்டை, பெல்ட், கருப்புத் தொப்பி, கருப்பு ஷூ ஆகியனவற்றை தனித்தனியாக அவற்றிற்கான விலையைக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சீருடை குறித்து தியோதர் மேலும் கூறும்போது, "டிரவுசருக்கு பதிலாக பேண்ட் மாற்றும் திட்டம் 2010-லேயே இருந்தது. ஆனால், அப்போது அந்த திட்டம் குறித்த தகவல் ஊடகங்களில் கசிந்துவிட்டது. அதனால் அப்போது அந்த முடிவை கைவிட்டோம். தற்போது அந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்" என்றார்.
சீருடை கடந்து வந்த பாதை:
ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் அணிந்து வரும் அரைகால் டிரவுசர் சீருடை 1925-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது தோலினால் ஆன பெல்ட், கருப்பு ஷூ, காக்கி தொப்பி, தடி ஆகியன பயன்பாட்டில் இருந்தது. பின்னர் 1930-ல் காக்கி தொப்பி கருப்புத் தொப்பியாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து காக்கிச் சட்டைக்குப் பதிலாக வெள்ளைச் சட்டை பயன்பாட்டுக்கு வந்தது.
1973-ல் ஷூவின் எடை குறைக்கப்பட்டு சற்று எடை குறைவான ஷூக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. கடைசியாக கடந்த 2011-ல் தோலினால் ஆன பெல்ட்டுக்கு பதில் கான்வாஸ் பெல்ட் அறிமுகப்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT