Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM

சர்ச்சைகளும் சங்கடங்களும்:குற்றம் நிரூபிக்கப்படாத முக்கிய கொலை வழக்குகள்!

சங்கரராமன் கொலை வழக்கில், ‘குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என்று சொல்லி, குற்றம் சாட்டப்பட்ட 23 பேரையும் செவ்வாய்க்கிழமையன்று விடுதலை செய்தது நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு பல்வேறு வாதப் பிரதிவாதங்களை உண்டாக்கிவிட்டிருக்கிறது. இதற்கு முன்பும் பல முக்கிய வழக்குகளிலும் கொலையாளிகள் யார் என்று தெரியாமலேயே முடிவுகள் எழுதப்பட்டுள்ளன. இன்னும் சில வழக்குகள் திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அவைகளில் சில..

அகில இந்திய வித்தியார்த்தி பரிஷத்தின் மாநிலத் தலைவராக இருந்த பேராசிரியர் பரமசிவம் 1996-ல் தனது வீட்டருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில், ’போலீஸ்’ பக்ருதீன், பழனி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வாஜ்பாய் பிரதமராக வந்ததை ஏற்க முடியாமல் கொலையைச் செய்ததாக வாக்குமூலம் எல்லாம் கொடுத்தார்கள். ஆனாலும், 4 வருடங்களில் 4 பேரும் குற்றம் நிரூபணமாகாமல் விடுதலை ஆனார்கள்.

சிவகங்கை மாவட்டத் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்த ரூசோ, 8.11.1998-ல் மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் மாவட்டமே பற்றி எரிந்தது. வழக்கில் 13 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த இந்த வழக்கில், 4 பேரை விடுவித்து மற்ற 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிவகங்கை செசன்ஸ் கோர்ட். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்ததையடுத்து 9 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இதை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார் ரூசோவின் மனைவி ஜோன்ஸ்.

கேரளாவைச் சேர்ந்த ஓமனா என்ற பெண், தனக்குத் திருமணமாகிவிட்டதை மறைத்த தனது காதலன் முரளிதரனை ஊட்டியில் ஹோட்டல் அறையில் விஷ ஊசி போட்டுக் கொன்றார். பிறகு உடலைத் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்துக் கொண்டு கொடைக்கானலுக்குக் காரில் பயணித்தபோது போலீஸ் பிடியில் சிக்கினார் ஓமனா. இந்த வழக்கையும் சி.பி.சி.ஐ.டி-தான் விசாரித்தது. ஊட்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், 2010-ல் ஜாமீனில் வெளியில் வந்த ஓமனா, போன இடம் தெரியவில்லை. இவரைப் பிடிப்பதற்காக இண்டர்போல் உதவியை நாடி இருக்கிறது தமிழகப் போலீஸ்!

ஓட்டல் சரவணபவன் ஊழியரான பிரின்ஸ் சாந்தகுமார் (ஜீவஜோதி வழக்கு) கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது. இந்த வழக்கில் சரவணபவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். பூந்தமல்லி நீதிமன்றம் அண்ணாச்சிக்குப் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அப்பீலில் உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய் தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கும் அண்ணாச்சி, இப்போது பெயிலில் வெளியில் இருக்கிறார். இந்தப் பெயிலைக் கேன்சல் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறது தமிழக அரசு.

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் 2003 மே 20-ல் மதுரையில் நடைப் பயிற்சிக்குச் சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டார். தி.மு.க. உட்கட்சி மோதலால் இந்தக் கொலை நடந்திருப்பதாக மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேர் மீது எஃப்.ஐ.ஆர். எழுதியது போலீஸ். தி.மு.க. இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியதால் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மாற்றப்பட்டது. முடிவில் 13 பேரும் விடுதலை! தி.மு.க. ஆட்சியில் இதை எதிர்த்து அப்பீல் ஏதும் செய்ய வில்லை. இப்போது, அ.தி.மு.க. ஆட்சியில் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதே பாணியில் நெல்லை ஆலங்குளத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவும் 31.12.2004-ல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கல்லூரி அதிபர் எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு போட்டது போலீஸ். பாலமுருகன், வளர்ந்த அழகர் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்த நெல்லை நீதிமன்றம், எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. மற்ற இருவருக்குக் குறைவான ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன் எஞ்சிய 5 பேரை விடுதலைச் செய்தது. தடா ரவி மீதான வழக்கு மட்டும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் எஸ்.ஏ.ராஜா உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து விடுதலை ஆகிவிட்டார். மற்றவர்களும் அப்பீலுக்குப் போயிருக்கிறார்கள்.

9.5.2007-ல் நடந்த மதுரை தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு சம்பவத்தை யாராலும் எளிதில் மறக்கமுடியாது. அழகிரியைப் பற்றி வெளியான கருத்துக் கணிப்பைச் சகித்துக்கொள்ள முடியாமல் இந்தக் குரூரம் அரங்கேறியதாகச் சொல்லப்பட்டது. இதில் வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூன்று அப்பாவி ஊழியர்கள் பலியானார்கள். அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு. விசாரணையைச் சி.பி.ஐ-க்கு மாற்றியது தி.மு.க. அரசு. முடிவில், 17 பேரும் விடுதலையாகிவிட்டார்கள்.

இவை சாம்பிள்கள் மட்டுமே. சந்தேகத்தின் பலனை எதிரிகளுக்கு சாதகமாக கொடுப்பதாக நீதிமன்றங்கள் தீர்ப்பு சொன்ன முக்கிய கொலை வழக்குகள் இன்னும் ஏராளம் உண்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x