Published : 17 Dec 2013 06:21 PM
Last Updated : 17 Dec 2013 06:21 PM

மாநிலங்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறியது; மக்களவையில் இன்று விவாதம்

லோக்பால் மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

மாநிலங்களவை தொடங்கியதும் லோக்பால்-லோக்ஆயுக்தா மசோதா-2011 விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மத்திய

சட்ட அமைச்சர் கபில் சிபல் விவாதத்தைத் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, லோக்பால் மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு வரலாற்று தினம் என்றார்.

சமாஜ்வாதி வெளிநடப்பு

பிரதான எதிர்க்கட்சியான பாஜக மற்றும் பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. சமாஜ்வாதி கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது.

அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ்பேசியபோது, லோக்பால் மசோதா நாட்டு நலனுக்கு எதிரானது. மசோதா நிறைவேற்றப்பட்டால் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற முடியாது என்று குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து சமாஜ்வாதி உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி மசோதாவை ஆதரித்துப் பேசினார். திருத்தப்பட்ட மசோதாவை பாஜக ஆதரிக்கிறது. எனினும் லோக்பால் அமைப்பில் மதம் சார்ந்த நியமனத்தை எதிர்க்கிறேன். இதுபோன்ற இடஒதுக்கீடுகளுக்கு சட்டத்தில் இடமில்லை என்று அவர் தெரிவித்தார்.

மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, பொதுத்துறை- தனியார் திட்டங்களையும் லோக்பால் வரம்பில் சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதிமுக, திமுக கோரிக்கை

அதிமுக உறுப்பினர் வி.மைத்ரேயன் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். எனினும் லோக்பால் வரம்பில் இருந்து பிரதமர், மாநில முதல்வர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். லோக் ஆயுக்தாமசோதாவை தமிழக சட்டமன்றத் தில் நிறைவேற்றுவதாக இருந்தால் முதல்வருக்கு விலக்கு அளித்து மட்டுமே அந்த மசோதாவை நிறைவேற்றுவோம் என்றும் மைத்ரேயன் தெரிவித்தார்.

திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் பேசியபோது, மதம் சார்ந்த அமைப்புகள் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து மாநில முதல்வர்களும் லோக்பால் வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுமார் 5 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இறுதியில் பெரும்பான்மை ஆதரவுடன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

லோக்பால் மசோதா 2011-ம் ஆண்டிலேயே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

பல்வேறு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் பாஜக தெரிவித்த முக்கிய திருத்தத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி, ஊழல் விவகாரங்களில் சிக்கும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் நோட்டீஸ் இன்றி சோதனை நடத்த சிபிஐ மற்றும் போலீஸாருக்கு அதிகாரம் அளித்து மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தப்பட்ட லோக்பால் மசோதா மக்களவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

10 ஆண்டுகள் வரை சிறை

லோக்பால் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் 5 பேர் கொண்ட லோக்பால் அமைப்பு நியமிக்கப்படும். இந்தக் குழுவினர் ஊழல் வழக்குகளை விசாரிப்பர். முதல்கட்ட விசாரணை 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக ஓராண்டு வரை மட்டுமே விசாரணையை நீட்டிக்கலாம். ஊழல்வாதிகளுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

அன்னா ஹசாரே வாழ்த்து

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மாநிலங்களவையில் லோக்போல் மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மக்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன் என்று ஹசாரே அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x