Published : 23 Oct 2013 09:17 AM
Last Updated : 23 Oct 2013 09:17 AM
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு ஆர்.எஸ்.புரா பகுதியில் நடந்த சண்டையில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானார், 3 வீரர்கள் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் நேற்று இரவு இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கையெறி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 20க்கும் மேற்பட்ட இந்திய நிலைகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலாடி கொடுக்கப்பட்டது. பல மணி நேரம் நடந்த சண்டையில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானார், 3 பேர் காயமடைந்தனர்.
இந்திய எல்லையில், சமீப காலமாக பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, எல்லை பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மாற்று வழியில் நடவடிக்கை:
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறுவதற்கு, வெறும் வார்த்தைகளால் அல்லாமல், வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பீதியில் எல்லையோர கிராம மக்கள்:
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் அச்சமடைந்துள்ள சம்பா மாவட்ட சச்தேகர் கிராமத்தினர், ஊரை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர். மற்றொரு எல்லை கிராமமான பர்கவால் கிராமத்தில், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை 200க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்த 2012- ஆம் ஆண்டு 117 ஆக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT