Published : 07 Nov 2014 08:34 AM
Last Updated : 07 Nov 2014 08:34 AM
மத்திய அமைச்சரவை வரும் 9-ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.
மத்திய அரசில் தற்போது 22 கேபினட் அமைச்சர்களும் 22 இணை அமைச்சர்களும் உள்ளனர். அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி குறைந்தபட்சம் 10 புதிய முகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பரிக்கர் மத்திய அமைச் சராக நியமிக்கப்படுவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது டெல்லியில் முகா மிட்டுள்ள அவர் நேற்றுமுன்தினம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
மேலும் கட்சியின் மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, இளைஞர் அணித் தலைவர் அனுராக் தாகுர் உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் தவிர கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப் படும் என்று கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தியுள்ள ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, இன்னும் 2 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த தகவல்கள் தெரியவரும் என்று தெரிவித் துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று காலை குருநானக்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பும் அமைச்சரவை விரிவாக்கத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று டெல்லி வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
நவம்பர் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுக்கு செல்கிறார். அதற்கு முன்பாக வரும் 9-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை அண்மையில் சந்தித்துப் பேசினேன். அப்போது மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார். கோவாவில் இருந்து டெல்லிக்கு இடம் மாறுவதில் விருப்பம் இல்லை.
கோவா முதல்வராக சிறப்பாக பணியாற்றி வருகிறேன். இந்தப் பணியை பாதியில் விட்டுச் செல்ல மனமில்லை. இருப்பினும் நாட்டுக்காக எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
மனோகர் பரிக்கருக்கு பாதுகாப்புத் துறை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கேட்டபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT