Published : 23 Jun 2017 10:32 AM
Last Updated : 23 Jun 2017 10:32 AM
கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள் ளனர்.
பூமியை துல்லியமாக கண்காணிக்கவும், தொலையுணர்வு வசதிகளை மேம்படுத்தவும் கார்ட்டோசாட்-2 ரக செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை கார்ட்டோசாட்-2 ரக செயற்கைக்கோள்கள் 5 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
6-வது முறையாக கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக்கோள்களை ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுன்ட்-டவுன் 22-ம் தேதி அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட் திட்டமிட்டபடி நேற்று காலை 9.29 மணிக்கு தீப்பிழம்பைக் கக்கியபடி விண்ணை நோக்கிப் பாய்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், படிப்படியாக 4 நிலைகளில் எரிபொருள் தீர்ந்த கலன்கள் ராக்கெட்டைவிட்டு பிரிந்தன. இதைத் தொடர்ந்து, சரியாக 16.05 நிமிடத்தில் 505 கி.மீ. தொலைவுக்குச் சென்ற நிலையில் ராக்கெட் இன்ஜினின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, 16.44-வது நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து பிரதான செயற் கைக்கோளான கார்ட்டோசாட்-2 பிரிந்தது. பின்னர் அடுத்தடுத்து மற்ற செயற் கைக்கோள்களும் பிரிந்து தனித்தனியே சென்றன. 30.30-வது நிமிடத்தில் அனைத்து செயற்கைக்கோள்களும் பிரிந்து சென்றதை இஸ்ரோ ராக்கெட் ஏவுதள கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உறுதிசெய்து அறிவித்தனர். அப்போது அனைத்து விஞ்ஞானிகளும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திட்ட இயக்குநருக்கு பாராட்டு
இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் மற்றும் விஞ்ஞானிகள், உயரதிகாரிகள் அனை வரும் பிஎஸ்எல்வி-சி38 திட்ட இயக்குநர் பி.ஜெயக்குமாரை கட்டியணைத்தும், கைகுலுக்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதான செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 தவிர, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய 15 கிலோ எடையுள்ள சிறியரக செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகள் உருவாக்கியுள்ள 29 சிறியரக நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
31 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 955 கிலோ. இதில் கார்ட்டோசாட்-2 மட்டும் 712 கிலோ எடை கொண்டது. செயற்கைக்கோள்கள், ராக்கெட்டின் மொத்த எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர்.
5 ஆண்டுகள் செயல்படும்
கார்ட்டோசாட்-2 மூலம் நில அமைப்பை துல்லியமாக கண்காணித்து, மிகத்தரமான புகைப்படங்களை எடுத்து அனுப்ப முடியும். தொலையுணர்வு வசதிகளையும் மேம்படுத்த முடியும். இந்த வசதிகளைக் கொண்டு, நகர, ஊரக மேம்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். சாலைப் போக்குவரத்து, குடிநீர் விநியோகம், கடலோரப் பகுதிகள் பயன்பாடு உள்ளிட்டவற்றையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.
இஸ்ரோ சார்பில் 39 பிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டி ருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரோ ஏவிய 40 பிஎஸ்எல்வி ராக்கெட்களில் ஒரு ராக்கெட் திட்டம் தவிர மற்ற அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.
பிரணாப், மோடி வாழ்த்து
பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத் தப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT