Published : 02 Mar 2014 02:00 PM
Last Updated : 02 Mar 2014 02:00 PM
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்ததால் அசாமில் பெண் ஒருவர் அவரது கணவரால் எரித்து கொல்லப்பட்டதாக செய்தி சனிக்கிழமை நாடு முழுவதும் பரவியது.
இதனை விசாரித்த அசாம் போலீஸார், எரிந்துபோன பெண், முத்தம் கொடுத்தவரல்ல என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ளது ஜோராஹட். இம்மாவட்டத்தின் பெண் சுய உதவிக்குழுக்கள் மற்றும் காங்கிரஸ் வார்டு உறுப்பினர்களை கடந்த 26 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத இந்த கூட்டத்தில் சுமார் 600 பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில், பெண்களின் மத்தியில் ராகுல் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கிருந்த பெண்கள் ராகுலின் கைகளை பிடித்து குலுக்கத் தொடங்கினர். இதில் ஒரு பெண் ராகுலின் பின்புறமாக வந்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டுச் சென்றார்.
இதனால் என்ன செய்வது என புரியாத ராகுல், லேசான வெட்கத்துடன் நெளிந்தார். அதற்குள் மற்றொரு பெண், ராகுலின் தலையிலும் முத்தம் கொடுத்தார். நிலைமையை சமாளிக்க அவரது பாதுகாப்பு அதிகாரிகள் வர வேண்டியதாயிற்று.
அக்கூட்டத்தின் பார்வையாளர்களில் ஒருவரது மொபைலில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி தொலைக்காட்சி செய்திகளில் வெளியானது.
இதற்கு மறுநாள் 27 ம் தேதி, ஜோர்ஹட்டில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள பேகாஜனில் ஒரு சம்பவம் நடந்தது. இங்கு காங்கிரஸ் வார்டு உறுப்பினராக இருப்பவர் பந்த்தி சத்துயே (35) தன் வீட்டில் தீயில் உடல் கருகி மர்மமான முறையில் இறந்தார்.
அவரது கணவரான சோமேஸ்வர் சத்துயேவும் (40) தீயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜோர்ஹட் கூட்டத்தில் ராகுலுக்கு முத்தம் அளித்ததால் பந்த்தியை அவரது கணவர் எரித்துக் கொன்றதாகவும், அவரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் பரவியது.
ராகுலுக்கு முத்தம் கொடுத்ததால் ஊரில் உள்ளவர்கள் தவறாகப் பேசியதால் பந்த்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை காப்பாற்ற சென்ற கணவரும் தீயில் சிக்கியதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து தி இந்துவிடம் ஜோர்ஹட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமர்தீப் கௌர் கூறுகையில், ‘இறந்து போன பெண்தான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவரா என உறுதியாக சொல்ல முடியாது. அந்தப் பகுதிவாசிகள் அவர் கூட்டத்திற்கு செல்லவில்லை என தகவல் தருகின்றனர். நடந்த சம்பவம் விபத்தா அல்லது கணவன் மனைவி தகராறில் கொல்லப்பட்டாரா? என விசாரணை செய்து வருகிறோம்’ எனத் தெரிவித்தார்.
இதற்காக கூட்டப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் தீதாபரின் காங்கிரஸ் தலைவர் சோன்கர் ராஜ்கோவா கூறுகையில், ‘அசாம் நாளிதழ்களில் மர்ம மரணம் என மட்டுமே வெளியானதை, இருதினங்களுக்கு பின் ஒரு செய்தி சேனல் தவறாக திரித்து ராகுலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT